< Back
தேசிய செய்திகள்
திருமணம் ஆசை வார்த்தை கூறி பெண்ணிடம் ரூ.64 லட்சம் மோசடி
தேசிய செய்திகள்

திருமணம் ஆசை வார்த்தை கூறி பெண்ணிடம் ரூ.64 லட்சம் மோசடி

தினத்தந்தி
|
28 Aug 2023 12:15 AM IST

மங்களூரு அருகே திருமணம் செய்து கொள்வதாக கூறி, பெண்ணை ஏமாற்றி ரூ.64 லட்சம் மோசடி செய்த தமிழக வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.

மங்களூரு

பெண்ணுடன் பழக்கம்

தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூருவை அடுத்த கங்கனாடியை சேர்ந்தவர் சாதிக், முபாரக். இவர்கள் 2 பேரும் சகோதரர்கள். இவர்களது சகோதரிக்கு ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து ஆகிவிட்டது.

இந்தநிலையில் 2-வது திருமணத்திற்கு மாப்பிள்ளை தேடி கொண்டிருந்தனர். இதற்காக ஆன்லைனில் உள்ள தனியார் திருமண தகவல் மையத்தில் அந்த பெண்ணின் பெயர் மற்றும் விவரங்களை பதிவு செய்து வைத்திருந்தனர்.

இதனை தமிழ்நாடு கரூர் மாவட்டம் பள்ளபட்டியைச் சேர்ந்த முகமது பரீத் ஷேக் என்பவர் பார்த்துள்ளார். அவரும் பெண் தேடி வந்தார்.

இதையடுத்து முகமது பரீத், பெண்ணின் சகோதரர்களான சாதிக், முபாரக் ஆகியோரை தொடா்பு கொண்டு, பேசினார். அப்போது அவர்கள், சகோதரியை முகமது பரீத்திற்கு திருமணம் செய்து கொடுக்க சம்மதித்தனர்.

இதையடுத்து கங்கனாடியில் உள்ள தனியார் ஓட்டலில் முகமது பரீத் மற்றும் பெண்ணின் குடும்பத்தினர் சந்தித்து பேசினர். பெண்ணிற்கும் முகமது பரீத்தை பிடித்துவிட்டது.

செல்போனில் பேசினர்

இதையடுத்து 2 பேரும் செல்போன் நம்பரை மாற்றி கொண்டனர். பின்னர் 2 பேரும் அடிக்கடி செல்போனில் பேச தொடங்கினர். அப்போது முகமது பரீத், நான் ஒரு செல்போன் செயலி தயாரித்துள்ளேன்.

அந்த செயலியை தனியார் நிறுவனத்தில் விற்றால் கூடுதல் பணம் கிடைக்கும். ஆனால் அந்த செயலியை விற்பனை செய்வதற்கான திட்ட அறிக்கை தயார் செய்ய அதிகளவு பணம் தேவைப்படுகிறது என்று கூறினார்.

இதை நம்பிய பெண், எவ்வளவு பணம் வேண்டும் என்று கேட்டார். அதற்கு முகமது பரீத், முதலில் ரூ.4 லட்சம் மட்டும் போதும் என்றார். அந்த பணத்தை பெண் வழங்கினார்.

பின்னர் வெவ்வேறு காரணங்களை கூறி, அடிக்கடி முகமது பரீத் பணம் வாங்க தொடங்கினார். இதுவரை ரூ.64 லட்சம் வரை பெண்ணிடம் இருந்து முகமது பரீத் வாங்கியுள்ளார்.

ரூ.64 லட்சம் மோசடி

இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு முகமது பரீத், பெண்ணை தொடர்பு கொண்டு பேசுவதை நிறுத்திவிட்டார். இதனால் சந்தேகம் அடைந்த பெண், முகமது பரீத்தை செல்போனில் தொடர்பு கொண்டு பேச முயற்சித்தார்.

ஆனால் முகமது பரீத்தின் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. நேரில் சந்திக்க முயற்சித்தார். அதுவும் முடியவில்லை. இதையடுத்து முகமது பரீத் தன்னை ஏமாற்றியதை அறிந்த பெண் இதுகுறித்து கங்கனாடி போலீசில் புகார் அளித்தார்.

அந்த புகாரில் தமிழ்நாட்டை சேர்ந்த முகமது பரீத், என்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி, ரூ.64 லட்சம் வாங்கி மோசடி செய்துவிட்டார்.

அவர் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறியிருந்தார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் முகமது பரீத்தை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்