வீடு வாடகைக்கு வேண்டும் என கூறி பெண்ணிடம் நூதன முறையில் ரூ.28 ஆயிரம் மோசடி
|வீடு வாடகைக்கு வேண்டும் என கூறி பெண்ணிடம் நூதன முறையில் ரூ.28 ஆயிரம் மோசடி சம்பவம் உடுப்பியில் நடந்துள்ளது.
மங்களூரு-
உடுப்பியை சேர்ந்தவர் உஷா கிரண். இவர் தனக்கு சொந்தமான வீடு ஒன்றை வாடகைக்கு விட முடிவு செய்தார். அதன்படி தனது வீட்டின் விவரங்கள் குறித்து ஓ.எல்.எக்ஸ். என்ற இணையதளத்தில் பதிவிட்டு இருந்தார். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அவரது செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது.
எதிர்முனையில் பேசிய நபர், வீடு வாடகைக்கு வேண்டும் என்று கேட்டுள்ளார். இதையடுத்து தனது வீட்டின் விவரங்களையும், வாடகை விவரங்களையும் உஷா கிரண் அந்த நபரிடம் தெரிவித்துள்ளார். இதற்கு சம்மதம் தெரிவித்த அந்த நபர், வீட்டுக்கு முன்தொகையை ஆன்லைன் மூலம் அனுப்பி வைப்பதாக தெரிவித்துள்ளார்.
மேலும் தான் ஒரு லிங்க் அனுப்பி வைப்பதாகவும், அதனை வங்கி கணக்கு விவரங்களை பதிவு செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். இதனை நம்பிய உஷாவும் அந்த நபர் அனுப்பிய லிங்க்கை திறந்து அதில் தனது வங்கி விவரங்களை தெரிவித்துள்ளார். சிறிது நேரத்தில் அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.28,496 எடுக்கப்பட்டதாக உஷாவுக்கு குறுந்தகவல் வந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், மர்மநபர் வீடு வாடகைக்கு கேட்டு நூதன முறையில் மோசடி செய்ததை உணர்ந்தார்.
இதுகுறித்த புகாரின்பேரில் உடுப்பி சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.