< Back
தேசிய செய்திகள்
மோசடி வழக்கு: நடிகை ஜாக்குலின் 12-ந்தேதி விசாரணைக்கு ஆஜராக சம்மன்
தேசிய செய்திகள்

மோசடி வழக்கு: நடிகை ஜாக்குலின் 12-ந்தேதி விசாரணைக்கு ஆஜராக சம்மன்

தினத்தந்தி
|
2 Sept 2022 1:26 PM IST

200 கோடி மோசடி வழக்கு விசாரணைக்கு ஆஜராக நடிகை ஜாக்குலின் பெர்னாண்டசுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

பணமோசடி வழக்கில் கடந்த 2019-ம் ஆண்டு சிறையில் அடைக்கப்பட்ட சிவிந்தர் சிங்கை சிறையில் இருந்து விடுதலை செய்வதற்கான ஏற்பாடுகளை செய்து தருவதாக கூறி, சிவிந்தர் சிங் மனைவி ஆதிதி சிங்கிடம் சுகேஷ் சந்திரசேகர் சுமார் ரூ.200 கோடியை மோசடி செய்ததாக ஆதிதி சிங் குற்றம் சாட்டினார்.

இந்த ரூ.200 கோடியில், ரூ.5.71 கோடியை நடிகை ஜாக்குலின் பெர்னாண்டசுக்கு பரிசாக சந்திரசேகர் கொடுத்ததாக குற்றம் சாட்டியுள்ள அமலாக்கத்துறை, ஜாக்குலின் வங்கிக்கணக்கில் வைத்திருந்த நிரந்தர வைப்புத்தொகை ரூ.7 கோடியை கடந்த ஏப்ரல் மாதம் இறுதியில் முடக்கியது.

இரட்டை இலை வழக்கில் கைதாகி சிறையில் உள்ள சுகேஷ் சந்திரசேகர், ஜாக்குலினுக்கு பரிசு பொருட்கள் வழங்கியதாக தொடரப்பட்ட வழக்கில், அமலாக்கத்துறை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதன் முதலாக சுகேசுடனான சந்திப்பு ஏற்பட்டது என கூறிய நடிகை ஜாக்குலினுக்கு, அவர் பயணம் செய்வதற்காக பல தடவை தனி விமானங்கள், ஹெலிகாப்டர்களை சுகேஷ் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார். பல கோடி ரூபாய் மதிப்புள்ள கார்கள், குதிரைகள் மற்றும் நகைகளை சுகேஷ் பரிசாக கொடுத்துள்ளார். இவை எல்லாவற்றையும் ஜாக்குலின் விசாரணை குழுவிடம் ஒப்பு கொண்டிருக்கிறார்.

இந்நிலையில், பணமோசடி தடுப்பு சட்ட விசாரணை அதிகாரிகளுக்கு நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் எழுதியுள்ள கடிதத்தில், அதிகாரிகள் முடக்கியுள்ள நிரந்தர வைப்பு தொகைக்கும், குற்றத்திற்கும் எந்தவித தொடர்புமில்லை என்று கடந்த 24-ந்தேதி தெரிவித்து உள்ளார். குற்றத்தின் அடிப்படையில் அந்த தொகை உருவாகவில்லை என்றும் தெரிவித்திருக்கிறார்.

இந்த நிரந்தர வைப்பு தொகையானது, நடிகையின் சொந்த, சட்டப்பூர்வ வழியிலான வருவாய் வழியே வந்த பணம் என்றும் முக்கிய குற்றவாளியான சந்திரசேகரை தெரிவதற்கு முன்பே தன்னிடம் அந்த பணம் இருந்தது என்றும் அவர் தெரிவித்து உள்ளார் என அமலாக்க துறை தெரிவித்துள்ளது.

சமீபத்தில் இந்த வழக்கில், டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் துணை நிலை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இதனை கவனத்தில் எடுத்து கொண்ட நீதிமன்றம், நடிகை ஜாக்குலின் பெர்னாண்டசை வருகிற செப்டம்பர் 26-ந்தேதி கோர்ட்டில் ஆஜராகும்படி உத்தரவு பிறப்பித்து உள்ளது.

இதேபோன்று, டெல்லி போலீசின் பொருளாதார குற்ற பிரிவுக்கான வழக்கறிஞர், வருகிற செப்டம்பர் 12-ந்தேதி விசாரணைக்கு ஆஜராகும்படி டெல்லி போலீசாரும் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டசுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சுகேஷ் சந்திரசேகர் மிரட்டி பணம் பறித்தது மற்றும் சட்ட விரோத பணபரிவர்த்தனை தொடர்பாக டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் வருகிற 12-ந்தேதி ஆஜராகுமாறு ஜாக்குலினுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்