கர்நாடக கவர்னர் கெலாட் பெயரில் போலி முகநூல் கணக்கு தொடங்கி மோசடி
|கர்நாடக மாநில கவர்னர் தாவர்சந்த் கெலாட் பெயரில் போலி முகநூல் கணக்கு தொடங்கி மோசடி செய்த மர்மநபரை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகிறார்கள்.
பெங்களூரு
கவர்னர் பெயரில் மோசடி
கர்நாடக மாநில கவர்னராக தாவர்சந்த் கெலாட் இருந்து வருகிறார். இந்த நிலையில், கவர்னர் தாவர்சந்த் கெலாட் பெயரில் போலி முகநூல்(பேஸ்புக்) கணக்கை மர்மநபர் திறந்திருந்தார்.
அந்த முகநூல் பக்கத்தில் கவர்னர் தாவர்சந்த் கெலாட்டின் புகைப்படத்தையும் மர்மநபர் வைத்திருந்தார். இதுபற்றி கவர்னர் மாளிகை அதிகாரிக்கு தெரியவந்தது.
அந்த முகநூலில் கவர்னர் படத்தையும் வைத்து, அவரது பெயரிலேயே முகநூல் கணக்கு தொடங்கி மோசடி செய்திருந்ததால் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். முதற்கட்டமாக யாருக்கும் எதிராகவோ, ஆபாசமாகவோ எந்த விதமான பதிவுகளும் அந்த முகநூல் பக்கத்தில் இருந்து வெளியிடப்படவில்லை என்பதை அதிகாரிகள் உறுதி செய்தனர்.
மர்மநபரை பிடிக்க தீவிரம்
இதையடுத்து, கவர்னர் பெயரில் போலி முகநூல் கணக்கு தொடங்கி மோசடியில் ஈடுபட்ட நபர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்படி பெங்களூரு மத்திய குற்றப்பிரிவின் சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் கவர்னரின் சிறப்பு அதிகாரியான பிரபு சங்கர் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கவர்னரின் பெயரில் என்ன காரணத்திற்காக முகநூல் கணக்கு தொடங்கப்பட்டது, அதன் நோக்கம் என்ன?, அவரது பெயரை கெடுக்கும் விதமாக மர்மநபர் சதி வேலை செய்தாரா? என்பது தெரியவில்லை.
இந்த சம்பவத்தில் ஒரு நபருக்கு மட்டுமே தொடர்பு உள்ளதா? என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது. அதே நேரத்தில் மோசடியில் ஈடுபட்ட அந்த மர்மநபரை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.