ஏமன் நோக்கிச் சென்ற ஈரான் துப்பாக்கிகள், ஏவுகணைகளை கைப்பற்றிய பிரான்ஸ்
|ஏமன் நோக்கிச் சென்ற ஈரான் துப்பாக்கிகள், ஏவுகணைகளை பிரான்ஸ் கைப்பற்றி உள்ளது.
துபாய்,
ஏமன் நாட்டில் 2014-ம் ஆண்டு முதல் அரசு படைகளுக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்கள் படைகளுக்கும் இடையே உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது. ஏமன் அரசு படைகளுக்கு சவுதி படைகள் ஆதரவுக்கரம் நீட்டுகின்றன. ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு ஈரான் ஆதரவு அளித்து வருகிறது.
இந்த நிலையில், ஈரானில் இருந்து ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு கொண்டு செல்லப்பட்ட ஆயிரக்கணக்கான தாக்குதல் துப்பாக்கிகள், எந்திர துப்பாக்கிகள் மற்றும் பீரங்கி எதிர்ப்பு ஏவுகணைகளை ஓமன் வளைகுடா பகுதியில் பிரான்ஸ் கடற்படை கைப்பற்றி உள்ளது என்று அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர்.
இதுபற்றி ஈரான் அரசு உடனடியாக ஒப்புக்கொள்ளவில்லை. இருப்பினும், அமெரிக்க ராணுவத்தின் மத்திய கட்டளையால் வெளியிடப்பட்ட ஆயுதங்களின் படங்கள், அமெரிக்கப் படைகளால் கைப்பற்றப்பட்ட ஆயுதங்களைப் போலவே இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. உக்ரைன் மீதான போரில் ரஷியாவுக்கு டிரோன்களை அனுப்புவதில் மேற்கத்திய நாடுகளின் அழுத்தத்தை ஈரான் எதிர்கொள்கிற தருணத்தில் இந்த ஆயுதக் கைப்பற்றல் பற்றிய தகவல்கள் வெளியாகி அதிர வைத்து உள்ளன. ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் அனுப்புவதை ஐ.நா. சபை தீர்மானம் தடை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.