ஒடிசாவில் தொடர் கொள்ளை: திருச்சியை சேர்ந்த கும்பல் கைது
|ஒடிசாவில் நடைபெற்ற தொடர் கொள்ளை சம்பவத்தில் திருச்சியை சேர்ந்த கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.
புவனேஷ்வர்,
ஒடிசா மாநிலம் சாகீத்பூர் பகுதியை சேர்ந்த நபரின் செல்போன் சமீபத்தில் மர்ம நபர்களால் திருடப்பட்டுள்ளது. இது குறித்து பாதிக்கப்பட்ட நபர் சாகீத்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இதனிடையே, திருடப்பட்ட செல்போனை விற்பனை செய்ய சிலர் முயற்சிப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. தகவலின் அடிப்படையில் விரைந்து சென்ற போலீசார் சாகீத்பூர் பகுதியில் 4 பேரை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட மூர்த்தி (42), நந்தகுமார் (47), தினேஷ் (47), மோகித் (48) ஆகிய 4 பேரும் தமிழ்நாட்டின் திருச்சி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பதும் அவர்கள் பிரபல கொள்ளை கும்பலை சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ஒடிசாவில் தொடர் கொள்ளையில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது. ஒடிசாவில் 10க்கும் மேற்பட்ட கொள்ளை சம்பவங்களில் இந்த கும்பல் ஈடுபட்டுள்ளது. இந்த கொள்ளை கும்பலிடமிருந்து 4 லேப்டாப்கள், 25 செல்போன்கள் உள்ளிட்ட பொருட்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இதையடுத்து, கொள்ளை கும்பலை சேர்ந்த 4 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் சிறையில் அடைக்கப்பட்டனர்.