பயங்கரவாத செயலுக்கு பயிற்சி முகாம்; பிஎப்ஐ தொடர்புடைய 40 இடங்களில் ரெய்டு - 4 பேர் கைது
|மத ரீதியில் இரு தரப்பினர் இடையே மோதலை உருவாக்க முயற்சிப்பதாக தொடரப்பட்ட வழக்கில் பிஎப்ஐ அமைப்பு தொடர்புடைய இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.
ஐதராபாத்,
தெலுங்கானா மாநிலம் நிசாமாபாத்தில் பயங்கரவாத செயலுக்கு பயிற்சி முகாம் நடத்துவதாகவும், மத ரீதியில் இரு தரப்பினர் இடையே மோதலை உருவாக்க முயற்சிபதாகவும் கடந்த ஜூலை 4-ம் தேதி அப்துல் காதர், ஷேக் ஷகதுல்லா, முகமது இம்ரான், முகமது அப்துல் முபின் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கு பின்னர் தேசிய புலனாய்வு (என்.ஐ.ஏ.) வசம் ஒப்படைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து இந்த வழக்கை மறுபதிவு செய்த என்.ஐ.ஏ. விசாரணையை தொடங்கியது.
இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக தெலுங்கானா, ஆந்திராவில் மொத்தம் 40 இடங்களில் என்.ஐ.ஏ. இன்று அதிரடி சோதனை நடத்தியது. பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா என்ற இஸ்லாமிய மத அமைப்பு தொடர்புடைய இடங்களில் இந்த சோதனை நடைபெற்றது.
பயங்கரவாத செயலுக்கு பயிற்சி முகாம் அளித்தல், மத ரீதியில் இரு தரப்பினர் இடையே மோதலை உருவாக்க முயற்சிப்பதாக தொடரப்பட்ட வழக்கில் இந்த சோதனை நடைபெற்றது.
தெலுங்கானாவில் 38 இடங்களிலும், ஆந்திராவில் 2 இடங்களிலும் நடத்தப்பட்ட இந்த சோதனையில் டிஜிட்டல் சாதனங்கள், ஆவணங்கள், 2 கத்திகள் உள்ளிட்டவற்றை கைப்பற்றினர்.
இந்த சோதனை தொடர்பாக 4 பேரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.