சொத்துக்குவிப்பு வழக்கு: சிறை தண்டனையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் பொன்முடி மேல்முறையீடு
|சொத்துக்குவிப்பு வழக்கில் பொன்முடி குற்றவாளி என தீர்ப்பளித்த சென்னை ஐகோர்ட் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து இருந்தது.
புதுடெல்லி,
வருமானத்துக்கு அதிகமாக ரூ. 1.72 கோடி சொத்து குவித்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், தமிழக உயர்கல்வி துறை அமைச்சராக இருந்த பொன்முடிக்கும், அவரது மனைவி விசாலாட்சிக்கும் தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.50 லட்சம் அபராதமும் விதித்து ஐகோர்ட் உத்தரவிட்டது.
அபராத தொகையை செலுத்த தவறினால் ஆறு மாதங்கள் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார். மேலும் சரணடைய 30 நாட்கள் அவகாசம் வழங்கிய நீதிபதி, 30 நாட்கள் அவகாசத்திற்குள் சரணடையாவிட்டால், தண்டனையை அனுபவிக்கச் செய்வதற்கான நடைமுறைகளை விழுப்புரம் கோர்ட் மேற்கொள்ள வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
இந்த நிலையில், சென்னை ஐகோர்ட் உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் பொன்முடி மேல்முறையீடு செய்துள்ளார். தண்டனையை உடனடியாக நிறுத்தி வைக்க வேண்டும்; தண்டனையை முழுவதுமாக ரத்து செய்ய வேண்டும் என்று பொன்முடி தரப்பின் மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வரும் எனத் தெரிகிறது.