< Back
தேசிய செய்திகள்
கென்ய அதிபர் தேர்தலில் பணியாற்ற சென்ற 2 இந்தியர்கள் கடந்த 80 நாட்களாக மாயம்! பிரதமர் மோடி தலையிட வேண்டும் என குடும்பத்தினர் கோரிக்கை
தேசிய செய்திகள்

கென்ய அதிபர் தேர்தலில் பணியாற்ற சென்ற 2 இந்தியர்கள் கடந்த 80 நாட்களாக மாயம்! பிரதமர் மோடி தலையிட வேண்டும் என குடும்பத்தினர் கோரிக்கை

தினத்தந்தி
|
13 Oct 2022 7:06 PM IST

ஸ்டார் மற்றும் பாலாஜி நிறுவனங்களின் முன்னாள் மூத்த நிர்வாகியான சுல்பிகார் கான் கென்யாவில் திடீரென மாயமானார்.

புதுடெல்லி,

பிரபல பொழுதுபோக்கு தொலைக்காட்சி நிறுவனமான ஸ்டார் மற்றும் பாலாஜி ஆகியவற்றின் முன்னாள் மூத்த நிர்வாகியான சுல்பிகார் கான் என்பவர் கென்யாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த நிலையில் திடீரென மாயமானார்.

கடந்த ஜூலை 21 முதல் அவரை காணவில்லை. அவருடன் இருந்த மற்றொரு இந்தியரான முகமது ஜெய்த் சமி கித்வாய் மற்றும் கென்யா டாக்சி டிரைவர் நிகோடெமஸ் முவானியா ஆகிய மூவரும் கென்யாவில் காணாமல் போயுள்ளனர்.

தற்போது காணாமல் போன சுல்பிகர் அகமது கான், கடைசியாக பாலாஜி டெலிபிலிம்ஸின் தலைமை இயக்க அதிகாரியாக (சிஓஓ) பணியாற்றினார். அதற்கு முன் ஈரோஸ் நவ் நிறுவன வணிகத் தலைவர் மற்றும் தலைமை வருவாய் அதிகாரியாக இருந்தார். முன்னதாக ஸ்டார் பிளஸ், ஸ்டார் கோல்ட், ஸ்டார் ஸ்போர்ட்ஸ், நேஷனல் ஜியோகிராபிக் போன்ற பல தொலைக்காட்சி சேனல்களை நிர்வகித்தவர் ஆவார்.

இந்த நிலையில், கென்யாவில் புதிய அதிபராக தேர்வான வில்லியம் ரூட்டோவின் தேர்தல் பிரச்சாரத்தில், 'தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்ப (ஐசிடி) குழுவில் சுல்பிகர் அகமது கான் சேர இருந்தார். இதற்காக அவர் கென்யாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த நிலையில் திடீரென மாயமானார்.

இந்தியர்கள் இருவரும் காணாமல் போன நேரத்தில், வில்லியம் ரூட்டோ கென்யாவின் எதிர்க்கட்சியில் இருந்தார். அவர்கள் வில்லியம் ரூட்டோற்கு ஆதரவான நடவடிக்கைகளில் ஈடுபட்டிந்தனர்.

இந்த நிலையில், கடந்த 80 நாடக்ளுக்கும் மேலாக மாயமாக உள்ள இந்தியர்கள் இருவரும் கடத்தப்பட்டிருக்கலாம் என்று அவர்களது குடும்பத்தினர் கூறியுள்ளனர். காணாமல் போன சுல்பிகர் அகமது கான் குடும்பத்தினர் கூறுகையில்:-

சுல்பிகர் அகமது கான் வழக்கமாக பதிவிடும் சமூகவலைதளங்களான பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் ஜூலை 21 முதல், எதுவும் பதிவிடவில்லை. காணாமல் போனதற்கு சில நாட்களுக்கு முன்பு, அவர் தனது நண்பர்கள் சிலரிடம் பேசியிருந்தார். அதன் பின் அவரிடமிருந்து எந்தவொரு அழைப்பும் இல்லை. நண்பர்களுடனான தொலைபேசி உரையாடல்களில், ஜூலை 24 ஆம் தேதி திரும்பி வருவதாகக் கூறினார்.

அவரைக் கண்டுபிடிக்க தீவிர தேடுதல் பணி நடைபெறுகிறதா என்பது எங்களுக்குத் தெரியாது. கென்யா அரசிடம் இந்திய அரசு விளக்கம் கேட்டுள்ளதா என்பது எங்களுக்குத் தெரியாதுஇந்த விவகாரத்தில் கென்யாவில் உள்ள உள்ளூர் போலீசார் துப்பு கிடைக்காமல் உள்ளனர்.

ஆகவே, தற்போது பிரதமர் நரேந்திர மோடி இந்த விவகாரத்தில் தலையிட வேண்டும் என்று குடும்பத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்