< Back
தேசிய செய்திகள்
பா.ஜனதா முன்னாள் மந்திரியின் மருமகன் விஷம் குடித்து தற்கொலை - காரணம் என்ன..? போலீசார் விசாரணை
தேசிய செய்திகள்

பா.ஜனதா முன்னாள் மந்திரியின் மருமகன் விஷம் குடித்து தற்கொலை - காரணம் என்ன..? போலீசார் விசாரணை

தினத்தந்தி
|
9 July 2024 6:59 AM IST

வனப்பகுதியில் காரை நிறுத்தி பா.ஜனதா முன்னாள் மந்திரி பி.சி.பட்டீலின் மருமகன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

பெங்களூரு,

கர்நாடக மாநில பா.ஜனதாவைச் சேர்ந்தவர் பி.சி.பட்டீல். நடிகரான இவர் முன்னாள் மந்திரியும் ஆவார். கடந்த 2019-ம் ஆண்டு கர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கட்சிகளின் கூட்டணி ஆட்சி கவிழ காரணமாக இருந்த 17 எம்.எல்.ஏ.க்களில் இவரும் ஒருவர் ஆவார். காங்கிரசில் இருந்து விலகி பா.ஜனதாவில் சேர்ந்த இவர் எடியூரப்பா மற்றும் பசவராஜ் பொம்மை ஆகியோர் தலைமையிலான பா.ஜனதா ஆட்சியில் மந்திரியாக பணியாற்றினார்.

இவரது மனைவி வனஜா. இவருக்கு சவுமியா, சிருஷ்டி என 2 மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகள் சவுமியாவின் கணவர் பிரதாப்குமார்(வயது 41). தொழில் அதிபரான இவர் தனியார் பள்ளி ஒன்றையும் நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. இவர் தனது மனைவி மற்றும் குடும்பத்துடன் ஹாவேரி மாவட்டம் ஹிரேகெரூரில் வசித்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று காலையில் தாவணகெரே வனப்பகுதி சாலையில் கேட்பாரற்ற நிலையில் ஒரு கார் நீண்ட நேரமாக நின்று கொண்டிருந்தது. இதைப்பார்த்த கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் அருகில் சென்று பார்த்தார். அப்போது காரில் ஒருவர் விஷம் குடித்த நிலையில் சுயநினைவின்றி கிடந்தார். உடனே அந்த நபரை, முதியவர் மீட்டு சிகிச்சைக்காக அரசு மெக்கான் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்.

மேலும் அந்த நபரின் செல்போனை எடுத்து ஆய்வு செய்தபோது அது முன்னாள் மந்திரி பி.சி.பட்டீலின் மருமகன் பிரதாப்குமார் என்பது தெரியவந்தது. இதையடுத்து டாக்டர்கள் இதுபற்றி பி.சி.பட்டீலிடமும், அவரது குடும்பத்தாரிடமும் தெரிவித்தனர்.

உடனே அவர்கள் அரசு மெக்கான் ஆஸ்பத்திரிக்கு புறப்பட்டு வந்தனர். இதற்கிடையே ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பிரதாப் குமார் பரிதாபமாக உயிரிழந்தார். போலீசார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில் பிரதாப் குமார் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. ஆனால் அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்?, ஏன் அவர் ஹிரேகெரூரில் இருந்து ஒன்னாளிக்கு வந்தார்? வனப்பகுதிக்கு சென்று அவர் தற்கொலை செய்து கொள்ள காரணம் என்ன? போன்ற விவரங்கள் தெரியவில்லை. தொடர்ந்து போலீசார் இதுபற்றி விசாரித்து வருகிறார்கள்.

மேலும் செய்திகள்