முன்னாள் கபடி வீரர் மரணம்
|இந்திய அணியின் முன்னாள் கபடி வீரர் மரணம் அடைந்தார்.
பெங்களூரு
தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு பகுதியைச் சேர்ந்தவர் உதய் சவுட்டா. கபடி வீரரான இவர் இந்திய கபடி அணியில் இடம் பிடித்து விளையாடி வந்தார். கடந்த 2007-ம் ஆண்டு உலக கோப்பையை வென்ற இந்திய கபடி அணியில் இவரும் இடம் பெற்றிருந்தார். வெற்றிக்கும் முக்கிய பங்கு வகித்தார்.
அதனால் அவரை கர்நாடக அரசு விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் ஏகலவ்ய விருது வழங்கி கவுரவித்தது. மேலும் பல்வேறு மாநிலங்களும், மாவட்ட நிர்வாகங்களும் அவருக்கு விருதுகள் வழங்கி கவுரவித்தன. கடந்த சில மாதங்களாக மூளையில் ஏற்கட்ட ரத்தக்கசிவு பிரச்சினை நோயால் அவதிப்பட்டு வந்த உதய் சவுட்டா, அதற்காக தீவிர சிகிச்சை பெற்று வந்தார்.
ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று அவர் மங்களூருவில் உள்ள தனது வீட்டில் பரிதாபமாக உயிரிழந்தார். அவருக்கு திருமணமாகி மனைவி, மகன் மற்றும் மகள் உள்ளனர். இளம் விளையாட்டு வீரர்களுக்கு உத்வேகமாக இருந்த உதய் சவுட்டாவின் மறைவு விளையாட்டு உலகில் பேரிழப்பு என்று கூறி பலரும் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.