< Back
தேசிய செய்திகள்
Prajwal Revanna
தேசிய செய்திகள்

பாலியல் வழக்கில் கைதான பிரஜ்வல் ரேவண்ணா காவல் நீட்டிப்பு

தினத்தந்தி
|
10 Jun 2024 5:17 PM IST

பிரஜ்வல் ரேவண்ணா கடந்த 31ம் தேதி பெங்களூரு விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதியின் மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியின் முன்னாள் எம்.பி.யாக இருந்தவர் பிரஜ்வல் ரேவண்ணா. இவர் முன்னாள் மந்திரி எச்.டி.ரேவண்ணாவின் மகன் ஆவர். பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச வீடியோக்கள் தேர்தல் நடைபெறுவதற்கு சில நாட்களுக்கு முன்பு வெளியானதையடுத்து அவர் ஜெர்மனிக்கு தப்பி சென்றார்.

பிரஜ்வலை சிறப்பு விசாரணை குழு அதிகாரிகள் தேடிவந்த நிலையில் கடந்த 31ம் தேதி பெங்களூருவுக்கு வந்து போலீசாரிடம் சரண் அடைவதாக வீடியோ மூலம் அவர் அறிவித்தார். இதையடுத்து கடந்த 31ம் தேதி அதிகாலை ஜெர்மனியில் இருந்து பெங்களூரு வந்த போது பிரஜ்வல் ரேவண்ணா கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட பிரஜ்வல் ரேவண்ணாவை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி 6 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். அந்த காவல் முடிந்தவுடன் கோர்ட்டில் ஆஜர்படுத்தி மேலும் 4 நாட்கள் அவருக்கு போலீசார் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டது.

இந்நிலையில், பிரஜ்வல் ரேவண்ணாவின் காவல் இன்றுடன் முடிவடைந்ததை அடுத்து கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவரை 14 நாட்கள் (வரும் 24ம் தேதி வரை) நீதிமன்ற காவலில் வைக்க பெங்களூரு செஷன்ஸ் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

மேலும் செய்திகள்