திகார் சிறை குளியலறையில் மயக்கம் போட்டு விழுந்த டெல்லி முன்னாள் மந்திரி சத்யேந்தர் ஜெயின்
|ஆம் ஆத்மி கட்சியின் முன்னாள் சுகாதார துறை மந்திரி சத்யேந்தர் ஜெயின் திகார் சிறை குளியலறையில் இன்று காலை மயக்கம் போட்டு விழுந்து உள்ளார்.
புதுடெல்லி,
டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியில் சுகாதார துறை மந்திரியாக இருந்தவர் சத்யேந்திர ஜெயின். இதுதவிர உள்துறை, மின்சாரம் மற்றும் நகர்ப்புற வளர்ச்சி உள்ளிட்ட இலாகாக்களையும் கவனித்து வந்து உள்ளார்.
கடந்த 2022ம் ஆண்டு மே 30-ந்தேதி, பணமோசடி தடுப்பு சட்ட பிரிவுகளின் கீழ் அமலாக்க இயக்குநரகம் அவரை கைது செய்தது. அவர் இந்த வழக்கில் திகார் சிறையில் நீதிமன்ற காவலில் உள்ளார்.
இந்நிலையில், திகார் சிறை குளியலறையில் இன்று காலை 6 மணியளவில் அவர் மயக்கம் போட்டு விழுந்து உள்ளார் என திகார் சிறை இயக்குநர் ஜெனரல் தெரிவித்து உள்ளார்.
அவருக்கு பல்வேறு மருத்துவ சோதனைகள் நடத்தப்பட உள்ளன. அவரது முக்கிய உறுப்புகள் வழக்கம்போல் இயங்கி வருகின்றன. அவரது முதுகு, இடது கால் மற்றும் தோள் பகுதியில் வலி உள்ளது என கூறியுள்ளார். தொடர்ந்து அவர் கண்காணிப்பில் வைக்கப்பட்டு உள்ளார் என மற்றொரு சிறை அதிகாரி கூறியுள்ளார்.
அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுவது கடந்த வாரத்தில் 2-வது முறையாகும். கடந்த திங்கட் கிழமை அவருக்கு டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
சத்யேந்திர ஜெயினுக்கு சிறையில் சிறப்பு வசதிகள் செய்து தரப்படுகிறது என அமலாக்க இயக்குனரகம் கடந்த காலத்தில் நீதிமன்றத்தில் புகார் அளித்தது. சிறையில் தலை மசாஜ், கால் மசாஜ், முதுகு மசாஜ் என அனைத்து வசதிகளும் ஜெயினுக்கு அளிக்கப்படுகிறது என குற்றச்சாட்டாக கூறியிருந்தது.