மகாத்மா காந்தி குறித்த காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ.வின் பேச்சு - பா.ஜ.க. கண்டனம்
|மகாத்மா காந்தி குறித்த காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ.வின் பேச்சுக்கு பா.ஜ.க. தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காந்திநகர்,
குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ. இந்திரனில் ராஜ்குரு, கடந்த 1-ந்தேதி தூத்சாகர் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசியபோது, "ராகுல் காந்தி அடுத்த மகாத்மா காந்தியாக உருவெடுப்பார். மகாத்மா காந்தி சற்று தந்திரக்காரராக இருந்தார். ஆனால் ராகுல் காந்தி முற்றிலும் வெளிப்படையானவர், தூய்மையான இதயம் கொண்டவர்" என்று பேசியிருந்தார்.
அவரது பேச்சுக்கு பா.ஜ.க. தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து குஜராத் மாநில பா.ஜ.க. துணைத் தலைவர் பாரத் போகாரா கூறுகையில், "மகாத்மா காந்தி நம் தேசத்தின் தந்தை. நம் நாட்டை சுதந்திரத்தை நோக்கி வழிநடத்தினார். அவரைப் பற்றிய இதுபோன்ற கருத்துக்களை மக்கள் மன்னிக்க மாட்டார்கள். இந்தக் கோபம் தேர்தல் முடிவுகளில் பிரதிபலிக்கும்" என்று தெரிவித்தார்.
இதனிடையே தனது பேச்சு குறித்து செய்தியாளர்களிடம் விளக்கமளித்த இந்திரனில் ராஜ்குரு, "ஆங்கிலேயர்களைப் போல் செயல்பட்டு ஜனநாயகத்தை அழிக்கும் முயற்சியில் பா.ஜ.க. ஈடுபட்டுள்ளது. மகாத்மா காந்தி ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போராடியது போல் பா.ஜ.க.வுக்கு எதிராகப் போராடுபவர் ராகுல் காந்தி மட்டுமே.
அதனால்தான் வரும் நாட்களில் ராகுல் காந்தியிடம் மகாத்மா காந்தியை மக்கள் பார்ப்பார்கள் என்று கூறினேன். நான் மகாத்மா காந்திஜி தொடர்பான பல வரலாற்றுப் புத்தகங்களைப் படித்திருக்கிறேன். அப்படி ஒரு புத்தகத்தில் காந்தியைப் பற்றி கூறப்பட்ட குறிப்பைத்தான் நான் கூறினேன். எனது சொந்த வார்த்தைகளை நான் சேர்க்கவில்லை. 'தந்திரம்' என்பதற்கு இணையான 'புத்திசாலி' என்ற சொல்லைப் பயன்படுத்த வேண்டும் என விரும்புகிறேன்" என்று தெரிவித்தார்.