பயங்கரவாத குழு அமைக்க முயற்சி செய்ததாக அசாம் முன்னாள் எம்.எல்.ஏ கைது
|அசாம் மாநிலத்தின் முன்னாள் எம்.எல்.ஏ ஹிதேஷ் பாசுமதாரி, பயங்கரவாதக் குழுவை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டுள்ளார்.
கோக்ரஜார்,
அசாம் மாநிலத்தின் முன்னாள் எம்.எல்.ஏ ஹிதேஷ் பாசுமதாரி, பயங்கரவாதக் குழுவை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டுள்ளார்.மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பக்சா மாவட்டத்தில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து பாசுமதாரி வெள்ளிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டார். அவரது வீட்டில் இருந்து வெடிமருந்துகளுடன் அதிநவீன ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டது.
இது தொடர்பாக கோக்ரஜாரின் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் நபனீதா சர்மா கூறும்போது, சிலர் புதிய பயங்கரவாத அமைப்பை உருவாக்க முயற்சிப்பதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது, அதனடிப்படையில் இந்த மூவரையும் கைது செய்தோம். விசாரணைக்கு பிறகே கூடுதல் விவரங்கள் தெரியவரும் என்று கூறினார்.
மூவரும் கோக்ரஜாரில் உள்ள தலைமை மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுத்தப்பட்டனர். பாசுமதாரி உட்பட இருவரை 5 நாள் போலீஸ் காவலில் வைக்கவும் மற்றொருவரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
பாசுமதாரி கடந்த 2011-ல் சப்பாகுரியில் போடோலாந்து மக்கள் முன்னணி (பிபிஎஃப்) சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.