சிறுத்தையை விஷம் வைத்து கொன்ற விவசாயி கைது
|குண்டலுபேட்டை அருகே சிறுத்தையை விஷம் வைத்து கொலை செய்த விவசாயிைய வனத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
கொள்ளேகால்:
குண்டலுபேட்டை அருகே சிறுத்தையை விஷம் வைத்து கொலை செய்த விவசாயிைய வனத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
சிறுத்தை சாவு
சாம்ராஜ்நகர் மாவட்டம் குண்டலுபேட்டை தாலுகா கொத்தனூரையொட்டிய வனப்பகுதியில் 3 வயது பெண் சிறுத்தை ஒன்று செத்து கிடந்தது. இதை பார்த்த கிராம மக்கள் உடனே வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறை அதிகாரிகள் அந்த சிறுத்தையின் உடலை கைப்பற்றினர். பின்னர் கால்நடை டாக்டர்களை வரவழைத்து, சிறுத்தையின் உடலை பிரேத பரிசோதனை செய்தனர்.
அந்த பிரேத பரிசோதனையில் சிறுத்தை விஷம் கலந்த உணவை சாப்பிட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது குண்டலுபேட்டை தாலுகா மல்லையனபுரா கிராமத்தை சேர்ந்த விவசாயி கோவிந்தராஜ், என்பவர் சிறுத்தைக்கு விஷம் வைத்து கொன்றிருப்பது தெரியவந்தது. அதாவது கடந்த சில நாட்களுக்கு முன்பு வனப்பகுதியில் இருந்து வந்த சிறுத்தை கோவிந்தராஜின் பண்ணை வீட்டில் இருந்த நாயை கடித்து கொன்றது.
விவசாயி கைது
இதையடுத்து அந்த சிறுத்தையை பழிவாங்க கோவிந்தராஜ் திட்டமிட்டார். இதற்காக சிறுத்தை திண்றுவிட்டு சென்ற நாயின் பாதி உடலில் விஷத்தை வைத்துள்ளார். மறுநாள் அந்த சிறுத்தை வந்து, மீதம் கிடந்த நாயின் உடலை திண்றுள்ளது. அதில் விஷம் இருந்ததால், சாப்பிட்ட சில நிமிடத்தில் சிறுத்தை செத்ததாக தெரியவந்தது. இது வன விலங்குகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் குற்றம் என்பதால், இது குறித்து கோவிந்தராஜ் மீது வனத்துறை அதிகாரிகள் வழக்கு பதிவு செய்திருந்தனர். இந்தநிலையில் நேற்று வனத்துறை அதிகாரிகள் கோவிந்தராஜை கைது செய்தனர்.