ரூ.17 கோடி முறைகேடு; பி.எம்.டி.சி. அதிகாரி கைது
|போலி கையெழுத்துகளை பயன்படுத்தி ரூ.17 கோடி முறைகேடு செய்யப்பட்டது தொடர்பாக பி.எம்.டி.சி. ஓய்வுப்பெற்ற முதன்மை அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
பெங்களூரு:
போலி கையெழுத்துகளை பயன்படுத்தி ரூ.17 கோடி முறைகேடு செய்யப்பட்டது தொடர்பாக பி.எம்.டி.சி. ஓய்வுப்பெற்ற முதன்மை அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது
பெங்களூரு மாநகர போக்குவரத்து கழகம் (பி.எம்.டி.சி.) சார்பில் 6 ஆயிரத்துக்கும் அதிகமான பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. பெங்களூருவின் அனைத்து பகுதிகளுக்கும் இந்த பஸ் சேவை வழங்கப்பட்டு வருகிறது. பி.எம்.டி.சி. நிர்வாகத்தின் தலைமை அலுவலகம் சாந்திநகரில் உள்ளது. பி.எம்.டி.சி. நிர்வாக உதவி பாதுகாப்பு அதிகாரியாக சி.கே.ரம்யா உள்ளார். அவர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வழக்கம்போல் அலுவலக ஆவணங்களை ஆய்வு செய்தார்.
அப்போது முன்னாள் அதிகாரிகளின் கையெழுத்துக்களை போலியாக பயன்படுத்தி ரூ.17½ கோடி வரை முறைகேடு செய்யப்பட்டது தெரிந்தது. இதுகுறித்து அவர் துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிட்டார். மேலும் இதுதொடர்பாக வில்சன் கார்டன் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் பி.எம்.டி.சி. நிர்வாகத்தின் ஓய்வுப்பெற்ற முதன்மை போக்குவரத்து மேலாளர் ஸ்ரீராம் முல்கல்வான் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
7 பேர் மீது வழக்கு
விசாரணையில் அவர் உள்பட ஏராளமான அதிகாரிகள் கூட்டாக சேர்ந்து அப்போது இருந்த நிர்வாக அதிகாரிகளின் கையெழுத்துக்களை போலியாக தயாரித்து, அதனை கொண்டு பணத்தை கையாடல் செய்து இருந்தது தெரிந்தது.
தொடர்ந்து நடத்திய விசாரணையில் இந்த கையாடலில் பெங்களூரு மண்டல போக்குவரத்து அதிகாரி ப்ரூனெட், மமதா, குணசீலா, பிரகாஷ் (கொப்பல்) உள்பட 7 பேரும் இதில் ஈடுபட்டது தெரிந்தது. அவர்கள் மீது வில்சன்கார்டன் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் தலைமறைவாகிவிட்ட அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
சட்ட நடவடிக்கை
இதுகுறித்து போக்குவரத்து துறை மந்திரி ராமலிங்க ரெட்டி நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில், பி.எம்.டி.சி. நிர்வாகத்தின் கீழ் செயல்பட்ட அதிகாரிகள், போலி கையெழுத்துக்களை பயன்படுத்தி டெண்டர்களை புதுப்பிப்பது, நிர்வாகத்திற்கு சொந்தமான வாடகை கட்டிடங்களுக்கு போலி ரசீது வழங்குவது, வங்கியில் இருந்து லட்சக்கணக்கில் பணத்தை சட்டவிரோதமாக பரிமாற்றியது போன்ற முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளனர்.
தற்போது 7 அதிகாரிகளும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.