எம்.எல்.சி. போஜேகவுடா பெயரில் போலி பதிவெண் கொண்ட கார் சிக்கியது
|எம்.எல்.சி. போஜேகவுடா பெயரில் போலி பதிவெண் கொண்ட கார் சிக்கியது.
பெங்களூரு:
பெங்களூருவில் காங்கிரஸ் கட்சி அலுவலகம் அருகே பிரபல கார் விற்பனை நிலையம் உள்ளது. அங்கு பழைய கார்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இதன் உரிமையாளர் சபாஷ் ஆவார். இந்த நிலையில் கார் விற்பனை நிலையம் மற்றும் அதன் உரிமையாளர் மீது ஜனதா தளம்(எஸ்) கட்சியை சேர்ந்த போஜேகவுடா எம்.எல்.சி., ஐகிரவுண்ட் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரில் தான் பயன்படுத்தும் காரின் பதிவெண்ணை பயன்படுத்தி மற்றொரு காரை, அந்த நிலைய உரிமையாளர் விற்பனை செய்ய முயற்சி செய்வதாக கூறி இருந்தார்.
அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் சம்பந்தப்பட்ட கார் விற்பனை நிலையத்திற்கு சென்றனர். அங்கு சோதனை நடத்தியதில் எம்.எல்.சி.யின் கார் பதிவெண் கொண்ட மற்றொரு கார் நின்றது. அதுகுறித்து நிலைய உரிமையாளர் சபாசிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் பல நாட்களாக விற்பனை ஆகாமல் இருந்த காரை எம்.எல்.சி. கார் என கூறி விற்பனை செய்ய முயன்றது தெரிந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். அவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.