பி.எம்.டி.சி. நிர்வாக இயக்குனர் பெயரில் அதிகாரிகள், ஊழியர்கள் மோசடி
|பெங்களூருவில் பி.எம்.டி.சி. நிர்வாக இயக்குனர் பெயரில் அதிகாரிகள், ஊழியர்கள் மோசடி செய்துள்ளனர்.
பெங்களூரு:
பெங்களூரு பி.எம்.டி.சி. நிர்வாக இயக்குனராக இருந்து வருபவர் சத்யாவதி. இவரின் கையெழுத்தை அதிகாரிகள் போலியாக போட்டு மோசடி செய்திருந்தது தெரியவந்துள்ளது. அதாவது பி.எம்.டி.சி பஸ் நிலையங்களில் கடைகள் நடத்துவதற்கான உரிமம் காலாவதி ஆன பின்பும் சம்பந்தப்பட்ட கடைகளின் உரிமையாளரிடம் இருந்து பணத்தைப் பெற்றுக் கொண்டு, அதற்கு நிர்வாக இயக்குனர் சத்யாவதி அனுமதி வழங்கியிருப்பது போல் அவரது கையெழுத்தை போலியாக போட்டு அதிகாரிகள் இந்த மோசடியில் ஈடுபட்டு இருந்தனர்.
இது தவிர பஸ்களில் செய்யப்படும் விளம்பரங்களுக்கும் தனியார் நிறுவனங்களிடமிருந்து பணத்தைப் பெற்றுக் கொண்டு சத்யாவதியின் கையெழுத்தை போலியாக போட்டு அதிகாரிகள் மோசடியில் ஈடுபட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு இருந்தது. இதில் பல அதிகாரிகள், ஊழியர்கள் ஈடுபட்டு இருப்பதுடன், பல லட்சம் ரூபாய் பெற்று மோசடி செய்து இருப்பதும் தெரியவந்துள்ளது. இதுபற்றி வில்சன் கார்டன் போலீஸ் நிலையத்தில் நிர்வாக இயக்குனர் சத்யாவதி சார்பில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.