போலீஸ் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட முயன்ற 4 பேர் கைது
|மாநிலம் முழுவதும் நேற்று முன்தினம் நடைபெற்ற போலீஸ் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட முயன்றதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
பெங்களூரு:
மாநிலம் முழுவதும் நேற்று முன்தினம் நடைபெற்ற போலீஸ் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட முயன்றதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
போலீஸ் காவலர் பணிக்கான தேர்வு
கர்நாடகத்தில் காலியாக இருந்த 545 போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்து தேர்வு கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்றது. இந்த தேர்வில் முறைகேடு நடந்தது. இதையடுத்து சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்து உயர் போலீஸ் அதிகாரி உள்பட 80-க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர்.
இதுதொடர்பான வழக்கு ஐகோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மாநிலம் முழுவதும் போலீஸ் துறையில் காலியாக உள்ள 420 போலீஸ் காவலர் பணிக்கான எழுத்து தேர்வு நடந்தது. இந்த நிலையில் இத்தேர்வில் முறைகேட்டில் ஈடுபட முயன்றதாக 4 பேரை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.
4 பேர் கைது
அதாவது தேர்வு நடந்த நாளன்று போலீசார் கொப்பல் மற்றும் சிக்கநாயக்கனஹள்ளி பகுதிகளில் சோதனை நடத்தினர். அப்போது முறைகேட்டில் ஈடுபட முயன்ற பசவராஜ், திலிப், திம்மேகவுடா மற்றும் ஹரிபிரசாத் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களை உடனடியாக பெங்களூருவுக்கு போலீசார் அழைத்து வந்தனர்.
அவர்களிடம் போலீசார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில் அவர்கள் சில தேர்வர்களிடம் பணத்தை பெற்று கொண்டு முறைகேட்டில் ஈடுபட முயன்றது தெரிந்தது. மேலும் அவர்கள் 4 பேரும் கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற போலீஸ் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டதும் தெரிந்தது. இதையடுத்து அவர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.