பாலீஷ் போடுவதாக கூறி பெண்களிடம் தங்க நகை 'அபேஸ்'; மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
|கே.ஆர்.பேட்டையில் பாலீஷ் போடுவதாக கூறி பெண்களிடம் தங்க நகைகளை அபேஸ் செய்த மர்மநபர்களை ேபாலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
மண்டியா:
கே.ஆர்.பேட்டையில் பாலீஷ் போடுவதாக கூறி பெண்களிடம் தங்க நகைகளை அபேஸ் செய்த மர்மநபர்களை ேபாலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
தங்க நகை பாலீஷ்
மண்டியா மாவட்டம் கே.ஆர்.பேட்டை தாலுகா புக்கனகெரே அருகே பல்லேனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் கணேஷ். இவரது மனைவி ராதா. இந்த நிலையில் நேற்று முன்தினம் ராதா மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அங்கு வந்த மர்மநபர்கள் 2 பேர், தாங்கள் தங்க நகைகளை பாலீஷ் செய்யும் தொழில் செய்து வருவதாகவும், தங்களிடம் தங்க நகைகளை கொடுத்தால், பாலீஷ் செய்து 5 நிமிடத்தில் பளபளப்பாக மாற்றி கொடுப்பதாக தெரிவித்துள்ளனர்.
இதனை நம்பிய ராதா, தான் அணிந்திருந்த 33 கிராம் தங்க சங்கிலியை கழற்றி அவர்களிடம் கொடுத்துள்ளார். பின்னர் அவர்கள், ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி தங்க நகையை பாலீஷ் செய்துள்ளனர்.
16 கிராம் தங்க நகைகள்
பின்னர் சிறிது நேரத்தில் தங்க நகையை பாலீஷ் செய்துவிட்டதாக கூறி ராதாவிடம் கொடுத்துள்ளனர். பின்னர் பக்கத்து வீட்டை சேர்ந்த நிங்கராஜூ என்பவாின் மனைவியிடமும் தங்க நகையை வாங்கி பாலீஷ் செய்து கொடுத்துவிட்டு சென்றனர். சிறிது நேரம் கழித்து தங்க நகையின் எடையில் 2 பேருக்கும் சந்தேகம் எழுந்தது.
இதனால் அவர்கள் தங்க நகையை பரிசோதித்தனர். அப்போது 2 பேரின் தங்க நகைகளும் தலா 8 கிராம் குறைந்திருந்தது. இதனால் பாலீஷ் செய்து தருவதாக கூறி தங்க நகையை உருக்கி தலா 8 கிராம் தங்க நகைகளை அபேஸ் செய்து சென்றது தெரியவந்தது. இதுகுறித்து அவர்கள் 2 பேரும் கே.ஆர்.பேட்டை போலீசில் புகார் அளித்தனர்.
வலைவீச்சு
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.