< Back
தேசிய செய்திகள்
நகைக்கடை உரிமையாளரிடம் ரூ.10 லட்சம் தங்க நகைகள் நூதன மோசடி
தேசிய செய்திகள்

நகைக்கடை உரிமையாளரிடம் ரூ.10 லட்சம் தங்க நகைகள் நூதன மோசடி

தினத்தந்தி
|
6 Feb 2023 12:15 AM IST

அம்ருதஹள்ளியில் நகைக்கடை உரிமையாளரிடம் ரூ.10 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்களை நூதன முறையில் மோசடி செய்த பெண் உள்பட 3 பேரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

அம்ருதஹள்ளி:

அம்ருதஹள்ளியில் நகைக்கடை உரிமையாளரிடம் ரூ.10 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்களை நூதன முறையில் மோசடி செய்த பெண் உள்பட 3 பேரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

நகைக்கடை

பெங்களூரு அம்ருதஹள்ளி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் நகைக்கடை நடத்தி வருபவர் ஓம்பிரகாஷ். இவரது கடைக்கு நேற்று முன்தினம் ஒரு பெண், நடுத்தர வயது மதிக்கத்தக்க ஒரு நபருடன் வந்தார். அவர் தனது மகளின் திருமணத்திற்காக நகைகள் வாங்க வந்திருப்பதாகவும், ஆனால் தன்னிடம் பணம் இல்லை என்றும், அதற்கு பதிலாக தன்னுடைய பழைய நகைகளை தருவதாகவும் கூறினார்.

மேலும் தன்னிடம் இருந்த ஒரு பழைய நகையையும் அந்த பெண், நகைக்கடை உரிமையாளர் ஓம்பிரகாசிடம் கொடுத்தார். அதை அவர் சோதித்து பார்த்தார். அப்போது அது உண்மையான தங்கம் என்று தெரியவந்தது. இதையடுத்து மறுநாள் வந்து தங்களுக்கு தேவையான நகைகளை வாங்கிக் கொள்வதாக கூறிவிட்டு அந்த பெண்ணும், அவருடன் வந்திருந்த நபரும் அங்கிருந்து சென்றுவிட்டனர்.

தங்க நகைகள், வெள்ளி பொருட்கள்

அதன்பேரில் நேற்று காலையில் அவர்கள் இருவரும் கடைக்கு வந்துள்ளனர். அவர்களுடன் சேர்ந்து மேலும் ஒருவர் கடைக்கு வந்திருந்தார். இந்த சந்தர்ப்பத்தில் அந்த பெண் தன்னிடம் இருந்த 240 கிராம் தங்க நகைகளை கொடுத்தார். அதை பெற்றுக்கொண்ட நகைக்கடை உரிமையாளர் ஓம்பிரகாஷ், அவர்களுக்கு புதிய டிசைன்களில் உள்ள நகைகளை காண்பித்தார்.

அதன்பேரில் பெண்ணுடன் வந்திருந்தவர்கள் 164 கிராம் தங்க நகைகள் மற்றும் ஏராளமான வெள்ளி பொருட்களை வாங்கிக் கொண்டு அங்கிருந்து சென்றுவிட்டனர். அவர்கள் வாங்கிச் சென்ற தங்கம் மற்றும் வெள்ளி பொருட்களின் மொத்த மதிப்பு ரூ.10 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

வலைவீச்சு

இந்த நிலையில் பெண்ணிடம் இருந்து வாங்கிய நகைகளை, நகைக்கடை உரிமையாளர் ஓம்பிரகாஷ், சிக்பேட்டைக்கு கொண்டு வந்து அங்குள்ள நகைக்கடையில் விற்க முயன்றார். அப்போது அது போலி என்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஓம்பிரகாஷ், இதுபற்றி அம்ருதஹள்ளி போலீசில் புகார் செய்தார்.

அதன்பேரில் இந்த நூதன மோசடி குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான பெண் மற்றும் அவருடன் வந்திருந்தவர்கள் என மொத்தம் 3 பேரை வலைவீசி தேடிவருகிறார்கள். மேலும் கடையில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து அதன் அடிப்படையில் போலீசார் துப்பு துலக்கி வருகிறார்கள். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்