உதவி பேராசிரியர் பதவிக்கான தேர்வின்போது முறைகேடாக தந்தையின் வருமானத்தை பதிவிட்ட திருமணமான பெண்கள்
|உதவி பேராசிரியர் பதவிக்கான தேர்வின்போது முறைகேடாக தந்தையின் வருமானத்தை பதிவிட்ட திருமணமான பெண்களின் தேர்வு பட்டியலை நிறுத்தி வைக்க தேர்வாணையம் முடிவு செய்துள்ளது.
பெங்களூரு:
கர்நாடகத்தில் உள்ள பி.யூ. கல்லூரிகளில் காலியாக இருக்கும் 1,242 உதவி பேராசிரியர்களுக்கான பதவிகளுக்கு எழுத்து தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வு கர்நாடக தேர்வு ஆணையத்தின் கீழ் நடைபெற்றது. இதற்கான இறுதி பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தேர்வு எழுதியவர்களில் சில திருமணமான பெண்கள், தங்களின் கணவர் வருமானத்தை பதிவு செய்யாமல், தந்தையின் வருவானம் குறித்த விவரங்களை பதிவு செய்து இருப்பதாக புகார்கள் எழுந்தது. அதன்பேரில் கர்நாடக தேர்வாணையம் விசாரணைக்கு உத்தரவிட்டது. விசாரணையில் திருமணமான பெண்கள் சிலர் இதுபோன்று முறைகேட்டில் ஈடுபட்டது தெரிந்தது. இதுகுறித்த அறிக்கையும் தேர்வாணையத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இந்த நிலையில் இதுகுறித்து நடிவடிக்கை எடுக்க பள்ளி கல்வித்துறை சார்பில் கர்நாடக தேர்வாணையத்திற்கு உத்தரவிடப்பட்டது.
அதன்பேரில் தேர்வில் கலந்து கொண்டு, தந்தையின் வருவானம் குறித்த விவரங்கள் பதிவிட்ட பெண்களின் தேர்வு பட்டியல் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இதுகுறித்து முழுவிசாரணைக்கு பிறகு தெளிவாக விளக்கம் அளிக்கப்படாவிட்டால், அவர்களது தேர்வு மதிப்பெண் முழுமையாக ரத்து செய்யப்படும் எனவும் கர்நாடக தேர்வாணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட பெண்கள், கர்நாடக ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர். அந்த வழக்கின் விசாரணை தற்போது கோர்ட்டில் நடந்து வருகிறது.