ஊட்டச்சத்து பொருட்களை பதுக்கிய அங்கன்வாடி ஊழியருக்கு எச்சரிக்கை
|கொத்தனூரு கிராமத்தில், சிறுவர்-சிறுமிகளுக்கு வழங்க வேண்டிய ஊட்டச்சத்து பொருட்களை பதுக்கிய அங்கன்வாடி ஊழியருக்கு பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அதிகாரி கடும் எச்சரிக்கை விடுத்தார்.
கோலார் தங்கவயல்:
கொத்தனூரு கிராமத்தில், சிறுவர்-சிறுமிகளுக்கு வழங்க வேண்டிய ஊட்டச்சத்து பொருட்களை பதுக்கிய அங்கன்வாடி ஊழியருக்கு பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அதிகாரி கடும் எச்சரிக்கை விடுத்தார்.
ஊட்டச்சத்து பொருட்கள் பதுக்கல்
சிக்பள்ளாப்பூர் மாவட்டம் சிட்லகட்டா தாலுகா கொத்தனூரு கிராமத்தில் அங்கன்வாடி மையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. அங்கு ஊழியராக மஞ்சுளா என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் அங்கன்வாடி மையத்திற்கு வரும் சிறுவர்-சிறுமிகளுக்கு வழங்க வேண்டிய ஊட்டச்சத்து பொருட்கள் மற்றும் அரிசி, பருப்பு உள்ளிட்ட உணவு பொருட்களை பதுக்கி வைத்ததாகவும், சட்டவிரோதமாக தனது வீட்டிற்கு அவற்றை எடுத்துச் சென்றதாகவும், கள்ளச்சந்தையில் விற்றதாகவும் புகார்கள் எழுந்தன.
இதுபற்றி அப்பகுதி மக்கள், குழந்தைகள் மற்றும் பெண்கள் மேம்பாட்டு அதிகாரியிடம் புகாரும் அளித்தனர். ஆனால் அந்த அதிகாரி இதுவரையில் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
அங்கன்வாடி ஊழியருக்கு எச்சரிக்கை
இந்த நிலையில் ஆவேசம் அடைந்த அப்பகுதி மக்கள் நேற்று குழந்தைகள் மற்றும் பெண்கள் மேம்பாட்டு அதிகாரியின் அலுவலகத்திற்கு சென்றனர். பின்னர் அவர்கள், அதிகாரியின் அலுவலகம் முன்பு தர்ணா போராாட்டம் நடத்தினர். அப்போது அங்கு வந்த அதிகாரி வெங்கடசாமியை முற்றுகையிட்டனர். மேலும் அங்கன்வாடி ஊழியர் மஞ்சுளா மீதான குற்றச்சாட்டுகளையும் கூறினர். உடனே அதிகாரி வெங்கடசாமி, அங்கன்வாடி மையத்திற்கு சென்று ஆய்வு செய்தார். அப்போது உணவு பொருட்களும், ஊட்டச்சத்து பொருட்களும் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அவற்றை பறிமுதல் செய்த அதிகாரி வெங்கடசாமி, சிறுவர்-சிறுமிகளின் பெற்றோர்களை அழைத்து வினியோகம் செய்தார். அதை தொடர்ந்து அங்கனவாடி ஊழியர் மஞ்சுளாவுக்கு எச்சரிக்கை விடுத்தார். இனி இதுபோல் நடந்துகொண்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தார். அதன் பின்னர், கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.