மகளின் ஆபாச வீடியோவை வெளியிடுவதாக கள்ளக்காதலன் மிரட்டினார் - பெண் பரபரப்பு வாக்குமூலம்
|சுரேசுக்கு திருமணமாகி 2 குழந்தைகள் இருந்தும் அனுஷாவுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்தார்.
பெங்களூரு,
பெங்களூருவில் முதல் திருமணத்தை மறைத்து பழகியதுடன், மகளின் ஆபாச வீடியோவை வெளியிடுவதாக கள்ளக்காதலன் மிரட்டியதாக இரட்டை கொலையில் கைதான பெண்ணின் தாயிடம் நடந்த விசாரணையில் தெரியவந்துள்ளது.
பெங்களூரு ஜே.பி.நகர் அருகே சாகாம்பரி நகரை சேர்ந்தவர் கீதா. இவரது மகள் அனுஷா (வயது 25). இவருக்கும் கொரகுன்டேபாளையாவை சேர்ந்த சுரேசுக்கும் கடந்த 5 ஆண்டுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறி இருந்தது. சுரேசுக்கு திருமணமாகி 2 குழந்தைகள் இருந்தும் அனுஷாவுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்தார். இதற்கிடையில், சுரேசுடன் உள்ள தொடர்பை துண்டித்ததால் நேற்று முன்தினம் சாரக்கி பூங்காவில் வைத்து அனுஷாவை கத்தியால் குத்தி சுரேஷ் கொலை செய்தார்.
தனது மகளை காப்பாற்றுவதற்காக கீதா, சுரேசின் தலையில் கல்லால் தாக்கினார். இதில் சுரேசும் உயிரிழந்தார். இதுகுறித்து ஜே.பி.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கீதாவை கைது செய்து விசாரித்தனர். கீதா அளித்துள்ள வாக்குமூலம் குறித்து போலீசார் கூறியதாவது:-
பெங்களூருவில் விழா ஏற்பாடுகளை (ஈவன்ட் மேனேஜ்மென்ட்) செய்யும் ஒரு நிறுவனத்தில் சுரேஷ் வேலை செய்து வந்தார். அப்போது தான் அனுஷாவுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டு கள்ளத்தொடர்பாக மாறி இருந்தது. தனக்கு திருமணமாகி 2 குழந்தைகள் இருப்பதை மறைத்து அனுஷாவுடன் சுரேஷ் பழகி உள்ளார். இதுபற்றி அனுஷாவுக்கு தெரியவந்ததும் சுரேசுடன் பழகுவதை நிறுத்தியுள்ளார். இதையடுத்து, அனுஷாவின் ஆபாச வீடியோவை வெளியிடுவதாக சுரேஷ் மிரட்டியுள்ளார். இதுபற்றி சுரேசின் மனைவியிடம் அனுஷாவும், கீதாவும் கூறியுள்ளனர். இதனால் 2 குடும்பத்தினர் இடையே பிரச்சினையும் ஏற்பட்டது.
அத்துடன் ஆர்.எம்.சி. யார்டு போலீஸ் நிலையத்தில் சுரேஷ் மீது அவர்கள் புகார் அளித்திருந்தனர். அங்கு நடந்த சமாதான பேச்சில் அனுஷாவுடன் பழக மாட்டேன், மிரட்ட மாட்டேன் என்று சுரேசிடம் எழுதி வாங்கிவிட்டு, அவரை எச்சரித்து போலீசார் அனுப்பி வைத்திருந்தார்கள். தன்னை விட்டு பிரிந்து விட்டதால் ஆத்திரமடைந்த சுரேஷ் கடைசியாக ஒரு முறை பேச வேண்டும் என்று சாரக்கி பூங்காவுக்கு அழைத்து கொலை செய்ததும், சுரேசை கீதா கல்லால் தாக்கி கொன்றுள்ளார். விசாரணைக்கு பின்பு கீதாவும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக ஜே.பி.நகர் போலீசார் தெரிவித்துள்ளனர்.