ஜம்மு காஷ்மீரில் 3 நாட்களாக பற்றி எரியும் காட்டுத்தீ
|ஜம்மு காஷ்மீரில் உள்ள தயா தர் வனப்பகுதியில் கடந்த 3 நாட்களாக காட்டுத்தீ பற்றி எரிந்து வருகிறது.
ஸ்ரீநகர்,
ஜம்மு காஷ்மீரின் உத்தம்பூர் மாவட்டத்தில் 'தயா தர்' என்ற வனப்பகுதி அமைந்துள்ளது. இந்த வனத்தில் மயில்கள் அதிக எண்ணிக்கையில் வசித்து வருகின்றன. மேலும் இது பல்வேறு வன விலங்குகள் மற்றும் பறவைகளின் வசிப்பிடமாகவும் திகழ்கிறது.
இந்நிலையில் தயா தர் வனப்பகுதியில் கடந்த 3 நாட்களாக காட்டுத்தீ பற்றி எரிந்து வருகிறது. இந்த தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தீயணைப்பு பணியில் இந்திய விமானப்படையின் ஹெலிகாப்டர்களை பயன்படுத்தவும் அனுமதி கோரப்பட்டுள்ளது.
இந்த காட்டுத்தீயில் ஏராளமான மரங்கள் எரிந்து நாசமாகியுள்ளன. மேலும் அங்கு வசிக்கும் மயில்கள் மற்றும் வன விலங்குகளும் பாதிக்கப்பட்டிருக்கலாம் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதே போல் உத்தம்பூர் மாவட்டத்தில் உள்ள கந்தேரா மலைப்பகுதியிலும் இன்று காலை காட்டுத்தீ ஏற்பட்டது. இதனை அணைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.