உக்ரைன் வெளியுறவுத்துறை மந்திரி இன்று இந்தியா வருகை
|உக்ரைன் வெளியுறவுத்துறை மந்திரி எமின் தபரோவா, 4 நாள் பயணமாக இன்று(ஏப்ரல் 10) இந்தியா வருகிறார்.
புதுடெல்லி,
உக்ரைன், ரஷ்யா இடையிலான போர் ஓராண்டுக்கும் மேலாக நீடித்து வருகிறது. இந்நிலையில் உக்ரைன் வெளியுறவுத்துறை மந்திரி இந்தியாவுக்கு எமின் தபரோவா, 4 நாள் பயணமாக இன்று(ஏப்ரல் 10) இந்தியா வருகிறார். உக்ரைனில் போர் நடைபெற்று வரும் நிலையில், அவரது வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
இந்தியாவுக்கு வரும் எமின் தபரோவா, இந்திய வெளியுறவுத் துறை இணை மந்திரி மீனாட்சி லேகியையும், தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகர் விக்ரம் மிஸ்ரியையும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-
"உக்ரைன் மந்திரியின் இந்த பயணத்தின்போது பிரதமர் நரேந்திர மோடியை உக்ரைனுக்கு வருமாறு அவர் அழைப்பு விடுக்கவுள்ளார். மேலும், ரஷ்யா நடத்தி வரும் தாக்குதலால் உக்ரைன் எந்த அளவு பாதிக்கப்பட்டுள்ளது என்பது குறித்தும், உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் தவறான நடவடிக்கைகள் குறித்தும் இந்திய ஊடகங்கள் மற்றும் சிந்தனையாளர்களிடம் எபின் தபரோவா எடுத்துரைப்பார்.
மேலும் உக்ரைனுக்கு இந்தியா மனிதாபிமான உதவி வழங்கவேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைக்கவுள்ளார்." இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த பயணத்தின் மிக முக்கிய நோக்கமாக, ஜி20 மாநாட்டில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பங்கேற்க இந்தியா அழைப்பு விடுக்க வேண்டும் என எமின் தபரோவா வேண்டுகோள் விடுப்பார் எனத் தெரியவந்துள்ளது.