முன்னாள் எம்.எல்.ஏ. தொடர்புடைய இடங்களில் சோதனை: ரூ. 5 கோடி, வெளிநாட்டு துப்பாக்கிகள் பறிமுதல்
|சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கில் முன்னாள் எம்.எல்.ஏ. தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.
சண்டிகர்,
அரியானா மாநிலம் யமுனா நகர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. தில்பக் சிங். இந்திய தேசிய லேக் தள கட்சியை சேர்ந்த இவர் மீது சுரங்க முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்குப்பதிவு செய்துள்ளது. அதேபோல், சோனிபேட் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. சுரேந்தர் பன்வார் மீதும் அமலாக்கத்துறை சட்டவிரோத பணபரிவர்த்தனை வழக்குப்பதிவு செய்துள்ளது.
இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக தில்பக் சிங் மற்றும் சுரேந்தர் பன்வார் தொடர்புடைய 20க்கும் மேற்பட்ட இடங்களில் நேற்று அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
முன்னாள் எம்.எல்.ஏ. தில்பக் சிங் தொடர்புடைய இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் 5 கோடி ரூபாய் பணம், வெளிநாட்டு துப்பாக்கிகள், தோட்டாக்கள், தங்கக்கட்டிகள், நகைகள், சொத்து ஆவணங்கள், மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அதேபோல், தில்பக் சிங், சுரேந்தர் பன்வார் தொடர்புடைய ஒருசில இடங்களில் அமலாக்கத்துறையினர் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர்.