இந்திய பங்கு சந்தைகளில் நவம்பர் மாத வெளிநாட்டு முதலீடு ரூ.36,239 கோடி..!
|நவம்பரில் இந்திய பங்குச்சந்தைகளில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் ரூ.36,239 கோடி முதலீடு செய்துள்ளனர்.
மும்பை,
டிசம்பர் மாதத்தின் முதல் நாள் இன்று காலை தொடங்கிய இந்திய பங்கு சந்தையானது ஏற்றத்துடன் தொடங்கியுள்ளது.
மும்பை சந்தை குறியீடான சென்செக்ஸ், 483.42 புள்ளிகள் உயர்ந்து 63,583.07 புள்ளிகளாக உள்ளது. தேசிய பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி 129.25 புள்ளிகள் உயர்ந்து 18,887.60 புள்ளிகளாக உள்ளது.
இதனிடையே, நவம்பரில் இந்திய பங்குச்சந்தைகளில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் ரூ.36,239 கோடி முதலீடு செய்துள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்திய நிதி வரத்து, இந்திய பங்குச் சந்தைகளுக்கு ஆதரவாக உள்ளது.
உலகின் முன்னணி பொருளாதார நாடுகளில் இந்தியாவில் அதிகப்படியான வளர்ச்சியைப் பதிவு செய்யும் என்ற கணிப்பு சர்வதேச முதலீட்டாளர்கள் மத்தியில் அதிகப்படியான நம்பிக்கையைக் கொடுத்துள்ளது.முதலீட்டாளர்கள் அனைவரும் அதிகளவிலான முதலீட்டை இந்தியச் சந்தை பக்கம் திருப்பியுள்ளனர்.
அமெரிக்க மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் வங்கியின் வட்டி விகித உயர்வு குறித்த நிலைப்பாடு, கச்சா எண்ணெய் விலை சரிவு ஆகியவற்றின் மூலம் மும்பை பங்குச்சந்தையில் அதிகளவிலான வெளிநாட்டு முதலீடுகள் குவிந்து வருகிறது.