< Back
தேசிய செய்திகள்
அந்நிய முதலீட்டில் முறைகேடு?... விதிமுறைகளை மீறிய பிபிசி நிறுவனம் - அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கை
தேசிய செய்திகள்

அந்நிய முதலீட்டில் முறைகேடு?... விதிமுறைகளை மீறிய பிபிசி நிறுவனம் - அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கை

தினத்தந்தி
|
13 April 2023 1:45 PM IST

பி.பி.சி. இந்தியா நிறுவனத்தில் இந்த முறை அந்நிய செலாவணி மீறல்கள் தொடர்புடைய குற்றச்சாட்டின் பேரில் அமலாக்க துறை சோதனை நடத்தி உள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவில் உள்ள பி.பி.சி. நிறுவனத்திற்கு வெளிநாட்டில் இருந்து வர கூடிய பணபரிமாற்றங்களில் நடைபெற்ற விதிமீறல்கள் தொடர்பாக அமலாக்க துறை அதிரடி சோதனை நடத்தி உள்ளது.

இதனை தொடர்ந்து அந்நிறுவனத்திடம், அந்நிய செலாவணி விதிமீறல்கள் தொடர்புடைய புதிய விசாரணைக்கு வேண்டிய, நிதி சார்ந்த விவரங்களை அளிக்கும்படி கேட்டு கொள்ளப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், பி.பி.சி. இந்தியா நிறுவனம் மீது அந்நிய செலாவணி நிர்வாக சட்டத்தின் (பெமா) கீழ் அமலாக்க துறை வழக்கு ஒன்றையும் பதிவு செய்து உள்ளது.

தொடர்ந்து, பணபரிமாற்ற கணக்கு புத்தகங்கள் மற்றும் நிறுவனத்தின் நிதி விவரங்கள் அடங்கிய அறிக்கைகள் உள்ளிட்டவற்றை அமலாக்க துறையினரிடம் சமர்ப்பிக்கும்படியும் கேட்டு கொள்ளப்பட்டு உள்ளது.

கடந்த ஜனவரியில், 2002-வது ஆண்டில் குஜராத் இனக்கலவரங்களில் பிரதமர் மோடிக்கு தொடர்பு இருப்பதாக காட்டும் 2 ஆவணப்படங்களை லண்டன் பி.பி.சி நிறுவனம் எடுத்து வெளியிட்டது. இதனை இந்தியாவில் வெளியிட மத்திய அரசு தடை விதித்தது.

தொடர்ந்து டெல்லி மற்றும் மும்பை நகரங்களில் உள்ள பி.பி.சி அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.

இது பழிவாங்கும் நடவடிக்கை என எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்தன. இருப்பினும் டெல்லி, மும்பையில் பி.பி.சி. அலுவலகங்களில் வருமான வரித்துறையினரின் சோதனை தொடர்ந்தது. இந்த ஆய்வு தொடர்பாக வருமான வரித்துறை விளக்கம் அளித்துள்ளது. அதில் முறைகேடுகளை கண்டறிந்துள்ளதாக வருமான வரி துறை கூறியது.

அதன்படி பல்வேறு வருவாய் பிரிவுகளில் வரி செலுத்தப்படவில்லை என்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது என்றும் பி.பி.சி. வருவாய் விவரங்கள் ஆங்கிலம் தவிர்த்த பிறமொழி ஒளிபரப்புகளில் லாப விவரத்துடன் ஒத்துப்போகவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், டிவி, டிஜிட்டல், ரேடியோ என பி.பி.சி. செய்திகள் மூலம் வரும் வருவாயை கணக்கிடுவதில் விதிமீறல் நடைபெற்றுள்ளது என்றும் ஆய்வின் போது பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் வருமான வரித்துறை விளக்கம் அளித்து இருந்தது.

இந்த நிலையில், வெளிநாட்டில் இருந்து பி.பி.சி. இந்தியாவுக்கு வர கூடிய பணபரிமாற்ற விவரங்கள் உள்ளிட்ட நிதிநிலை அறிக்கை விவரங்களை சமர்ப்பிக்கும்படி அமலாக்க துறை அந்நிறுவனத்திடம் கேட்டு கொண்டு உள்ளது. அந்நிய செலாவணி விதிமீறல்கள் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து, விசாரணை உள்ளிட்டவற்றுக்கு பின்பு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்