அன்னிய செலாவணி மோசடி வழக்கு - அனில் அம்பானியின் மனைவி டினா அம்பானியிடம் அமலாக்கத்துறை விசாரணை
|அனில் அம்பானியின் மனைவி டினா அம்பானி இன்று அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராகியுள்ளார்.
புதுடெல்லி,
யெஸ் வங்கி அதிபர் ராணா கபூருக்கு எதிரான சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கடந்த 2020-ம் ஆண்டு பிரபல தொழில் அதிபர் அனில் அம்பானியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது. இதேபோல சுவிஸ் வங்கி கணக்கில் ரூ.814 கோடி வைத்து ரூ.420 கோடி வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாகவும் அவர் மீது குற்றச்சாட்டு உள்ளது. அதுகுறித்து வருமான வரித்துறை விசாரித்து வருகிறது.
அன்னிய செலாவணி மோசடி (பெமா) வழக்கு தொடர்பாக நேற்று அனில் அம்பானி அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரானார். இந்த வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் அனில் அம்பானியிடம் சுமார் 8 மணி நேரம் தீவிர விசாரணை நடத்தி வாக்குமூலத்தைப் பெற்று பதிவு செய்தனர்.
இந்த நிலையில் அனில் அம்பானியின் மனைவி டினா அம்பானி இன்று அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராகியுள்ளார். அன்னிய செலாவணி மேலாண்மைச் சட்டத்தின் கீழ், அனில் அம்பானியின் நிறுவனங்களில் முதலீடுகள் மற்றும் வெளிநாட்டு அதிகார வரம்புகளில் வெளியிடப்படாத சொத்துக்கள் தொடர்பான வழக்கு குறித்து டினா அம்பானியிடம் விசாரிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.