< Back
தேசிய செய்திகள்
அன்னிய செலாவணி சட்ட விதிமீறல்: சீன செல்போன் நிறுவனத்தின் ரூ.5,551 கோடி பறிமுதல்

கோப்புப்படம் 

தேசிய செய்திகள்

அன்னிய செலாவணி சட்ட விதிமீறல்: சீன செல்போன் நிறுவனத்தின் ரூ.5,551 கோடி பறிமுதல்

தினத்தந்தி
|
1 Oct 2022 6:30 AM IST

சீன செல்போன் நிறுவனத்துக்கு சொந்தமான ரூ.5 ஆயிரத்து 551 கோடி மதிப்புள்ள டெபாசிட்டை அமலாக்கத்துறை பறிமுதல் செய்தது.

புதுடெல்லி,

சீனாவை சேர்ந்த செல்போன் உற்பத்தி நிறுவனம், சியோமி குழுமம். அதன் இந்திய கிளையான சியோமி இந்தியா, நாட்டில் 'ரெட்மி' என்ற பெயரிலான செல்போன்களை வர்த்தகம் செய்து வருகிறது.

இந்த நிறுவனத்துக்கு சொந்தமான ரூ.5 ஆயிரத்து 551 கோடி மதிப்புள்ள டெபாசிட்டை அமலாக்கத்துறை பறிமுதல் செய்தது. கடந்த ஏப்ரல் 29-ந் தேதி இதற்கான உத்தரவை பிறப்பித்தது. அன்னிய செலாவணி மேலாண்மை சட்டத்தின் (பெமா) கீழ், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

பெமா சட்டப்படி, இந்த உத்தரவுக்கு உரிய உயர் அதிகாரி ஒப்புதல் அளிக்க வேண்டும். அதனால், உயர் அதிகாரி ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அதை ஆய்வு செய்த அதிகாரி, பறிமுதல் உத்தரவுக்கு நேற்று ஒப்புதல் அளித்தார். அனுமதியின்றி ரூ.5 ஆயிரத்து 551 கோடிக்கு சமமான அன்னிய செலாவணியை இந்தியாவுக்கு வெளியே சியோமி நிறுவனம் அனுப்பி, அங்கேயே வைத்திருப்பது 'பெமா' சட்டத்தின் 4-வது பிரிவை மீறிய செயல் என்று அமலாக்கத்துறை கூறியது சரிதான் என்று உயர் அதிகாரி கூறியுள்ளார்.

காப்புரிமை தொகையை அனுப்பியதாக சியோமி நிறுவனம் சொல்வது, அன்னிய செலாவணியை அனுப்புவதற்கான சாக்குபோக்கு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் இதுவரை அமலாக்கத்துறையால் பறிமுதல் செய்யப்பட்ட தொகைகளில் இதுதான் மிகப்பெரிய தொகை ஆகும்.

மேலும் செய்திகள்