வசதி படைத்தவர்களுக்கான பி.பி.எல். கார்டு ரத்தை வாபஸ் பெறவேண்டும்; ஜனதாதளம் (எஸ்) கவுன்சிலர் கோரிக்கை
|வசதி படைத்தவர்களுக்கான பி.பி.எல். கார்டு ரத்தை வாபஸ் பெறவேண்டும் என ஜனதாதளம் (எஸ்) கவுன்சிலர் கோரிக்கை வைத்துள்ளார்.
சிக்கமகளூரு;
சிக்கமகளூரு டவுன் 13-வது வார்டை சேர்ந்த ஜனதா தளம் (எஸ்) கவுன்சிலர் ஏ.சி.குமார் கூறியதாவது:-
கர்நாடகத்தில் ஏழை மக்கள் ரேஷன் கடைகளில் உணவு பொருட்கள் வாங்கி கொள்வதற்கு பி.பி.எல். கார்டுகள் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் வசதிப்படைத்தவர்களும் பி.பி.எல் கார்டுகளை பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து மாநில அரசு ஆண்டுக்கு ரூ.2 லட்சத்திற்கு மேல் வருமானம், டி.வி, கார் போன்ற ஆடம்பர பொருட்கள் வைத்திருப்பவர்களுக்கு பி.பி.எல். கார்டை ரத்து செய்து உத்தரவிட்டது. இதையடுத்து அவர்களிடமிருந்து பி.பி.எல். ரேஷன் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதனால் குறைந்த விலைக்கு கார் வாங்கி வாடகைக்கு ஓட்டும் டிரைவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கு சவாரி கிடைத்தால் தான் வருமானம். அப்படியிருக்கையில் அவர்களிடமும் பி.பி.எல் கார்டுகளை மாநில அரசு பறித்துள்ளது. மேலும் அனைவரது வீடுகளிலும் குளிர்சாதனபெட்டி, இருச்சக்கர வாகனம் உள்ளது.
இதனால் ஏழை, நடுத்தர மக்கள் உணவுப்பொருட்கள் வாங்க முடியாமல் சிரமப்பட்டு வருகிறார்கள். எனவே, மாநில அரசு பி.பி.எல். கார்டு ரத்து செய்ததை திரும்ப பெறவேண்டும் இல்லையென்றால் போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.