< Back
தேசிய செய்திகள்
காஷ்மீரில் முதல் முறையாக.. தேர்தல் ஆணையத்தின் அதிரடி - கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்
தேசிய செய்திகள்

காஷ்மீரில் முதல் முறையாக.. தேர்தல் ஆணையத்தின் அதிரடி - கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்

தினத்தந்தி
|
19 Aug 2022 8:50 PM IST

தனி மாநிலமாக இருந்து யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்ட ஜம்மு காஷ்மீரில், முதன் முறையாக வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் வாக்காளராகப் பதிவு செய்யலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

ஜம்மூ காஷ்மீர்,

ஜம்மு காஷ்மிர் மாநிலம் இந்தியாவோடு இணைந்தபோது அந்த மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டது. அதன்படி அங்கு காஷ்மீரி அல்லாதவர்கள் சொத்து வாங்க முடியாது.

அதேபோல பிற மாநிலத்தவர்களும் வாக்காளர்களாக ஆக முடியாது என்ற நிலை இருந்து வந்தது. 2019 ஆம் ஆண்டு அந்த மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியல் சாசன பிரிவு 370 ரத்துசெய்யப்பட்டது.

சிறப்பு அந்தஸ்து ரத்துசெய்துள்ள நிலையில், ஜம்மு காஷ்மீரில் வசிக்கும் மற்ற மாநிலத்தவரும் வாக்களிக்க முடியும் என்ற நிலை உருவானது. வெளி மாநிலத்தவரை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதால், வாக்காளர் எண்ணிக்கையில் 33 சதவீதம் அதிகரித்து உள்ளது.

அதாவது மொத்த வாக்காளர்களில் மூன்றில் ஒரு பங்கினர் வெளி மாநிலங்களை பூர்வீகமாக கொண்டவர்களாக இருபார்கள். கல்வி, தொழில், வர்த்தகத்திற்காக அங்கு நீண்ட காலமாக வசித்துவரும் யாரும் வாக்காளர்களாக பதிவுசெய்ய குடியிருப்பு சான்று பெறவேண்டியதில்லை என்றும், அக்டோபர் 1 ஆம் தேதி அன்று 18 வயது நிரம்பியவராக இருந்தால், போதுமானது என்றும் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

இதை கடுமையாக விமர்சித்துள்ள முன்னாள் முதல் மந்திரி உமர் அப்துல்லா, ஜம்மு காஷ்மீரில் உண்மையான வாக்காளர்களை விட பாஜக தற்காலிக வாக்காளர்களை நம்புகிறது என்றும், இது அந்த கட்சியின் பாதுகாப்பின்மையை காட்டுகிறது என்றும் கூறியுள்ளார்.

மற்றொரு முன்னாள் முதல் மந்திரியான மெகபூபா முக்தியோ ஜம்மு காஷ்மீரை பாஜக தொடர்ந்து தனது இரும்பு பிடிக்குள் வைத்திருப்பதையே இது காட்டுகிறது என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

அடுத்த மாதம் 15 ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிட நவம்பர் 10 ஆம் தேதி ஆகிவிடும் என்பதால், இந்த ஆண்டுக்குள் தேர்தல் நடைபெறும் என்ற எதிர்பார்ப்பும் புஸ்வானம் ஆகியுள்ளது.

மேலும் செய்திகள்