< Back
தேசிய செய்திகள்
ஜனநாயகம் வலுப்பட அனைவரும் வாக்களிக்க வேண்டும்; ஜெய்ராம் தாக்கூர் வேண்டுகோள்
தேசிய செய்திகள்

ஜனநாயகம் வலுப்பட அனைவரும் வாக்களிக்க வேண்டும்; ஜெய்ராம் தாக்கூர் வேண்டுகோள்

தினத்தந்தி
|
12 Nov 2022 10:22 AM IST

ஜனநாயகம் இன்னும் வலுப்பட அனைவரும் வாக்களியுங்கள் என குடும்பத்துடன் வாக்களித்த இமாசல பிரதேச முதல்-மந்திரி வேண்டுகோள் விடுத்து உள்ளார்.

சிம்லா,

இமாசல பிரதேச மாநிலத்தில் முதல்-மந்திரி ஜெய்ராம் தாக்கூர் தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடந்து வருகிறது. அங்கு 68 இடங்களை கொண்ட சட்டசபைக்கு இன்று தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் 412 வேட்பாளர்கள் போட்டியில் உள்ளனர். இவர்களில் 24 பேர் மட்டுமே பெண்கள் ஆவார்கள்.

இங்கு 55 லட்சத்து 92 ஆயிரத்து 828 வாக்காளர்கள் உள்ளனர். பெண் வாக்காளர்களை விட (27 லட்சத்து 37 ஆயிரத்து 845), ஆண் வாக்காளர்கள் அதிகம் ( 28 லட்சத்து 54 ஆயிரத்து 945). இந்த மாநிலத்தில் மூன்றாம் பாலினத்தவர்கள் 38 பேர் உள்ளனர். இவர்களுக்காக 7,881 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

பாரதீய ஜனதா கட்சியும், காங்கிரசும் மொத்தம் உள்ள 68 தொகுதிகளிலும் வேட்பாளர்களை களமிறக்கி உள்ளன. ஆம் ஆத்மி கட்சியும் அத்தனை இடங்களிலும் வேட்பாளர்களை நிறுத்தி இருக்கிறது. இடதுசாரி கட்சிகள் 12 இடங்களில் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளன. நேற்றுமுன்தினம் மாலை அங்கு பிரசாரம் ஓய்ந்தது.

முக்கிய வேட்பாளர்களாக முதல்-மந்திரி ஜெய்ராம் தாக்குர் (செராஜ்), மாநில காங்கிரஸ் தலைவர் அக்னிஹோத்ரி (ஹரோலி), முன்னாள் முதல்-மந்திரி வீரபத்ர சிங்கின் மகன் விக்ரமாதித்ய சிங் (சிம்லா ஊரகம்) உள்ளனர். வாக்குப்பதிவுக்கு விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதனை முன்னிட்டு வாக்கு செலுத்துவதற்காக காலை முதலே வாக்காளர்கள் வாக்கு சாவடிக்கு வரிசையாக வர தொடங்கி உள்ளனர். இதனை தொடர்ந்து காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடந்து வருகிறது. மாலை 5.30 மணிக்கு வாக்குப்பதிவு முடிகிறது.

இமாசல பிரதேச முதல்-மந்திரி மாண்டி மாவட்டத்தில் உள்ள கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து விட்டு திரும்பினார். தனது குடும்பத்துடன் செராஜ் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட மாண்டி மாவட்டத்தில் உள்ள வாக்கு சாவடியில் வாக்களித்து உள்ளார்.

அவர் கூறும்போது, மிக பெரிய வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. அதற்கேற்ற தகவலும் கிடைத்து உள்ளது. இதனை விட மிக முக்கியம், மக்கள் அமைதியான முறையில் வாக்களித்து வருகின்றனர் என் கூறினார்.

அவருடன் அவரது மனைவி சாதனா தாக்குர், மகள்கள் சந்திரிகா தாக்குர், பிரியங்கா தாக்குர் ஆகியோரும் வாக்களித்தனர். தொடர்ந்து அவர் கூறும்போது, நல்ல முறையில் பிரசாரம் முடிந்ததில் மகிழ்ச்சி. மக்களும் ஒத்துழைப்பு அளித்தனர்.

இதற்காக மக்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். அனைத்து வாக்காளர்களும் இன்று தங்களது வாக்குகளை செலுத்த வேண்டும். அதனால், நமது ஜனநாயகம் இன்னும் வலுப்படும் என அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்