அத்தியாவசிய பொருட்கள் விலை அதிகரிப்பு: பெங்களூரு ஓட்டல்களில் உணவுகள் விலை உயர்வு
|அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு காரணமாக பெங்களூரு ஓட்டல்களில் உணவுகள் விலை உயர்ந்துள்ளது.
பெங்களூரு:
உணவுகள் விலை உயர்வு
அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த சூழ்நிலையில் கர்நாடக அரசு கடந்த 9 மாதங்களில் மட்டும் 3 முறை மின் கட்டணத்தை உயர்த்தியுள்ளது. இது பொதுமக்கள் மீது பெரும் பொருளாதார சுமையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சூழ்நிலையில் கர்நாடகத்தில் சமீபத்தில் பால், தயிர் விலை லிட்டருக்கு 2 ரூபாய் உயர்த்தப்பட்டது. அத்துடன் நெய் விலையும் அதிகரிக்கப்பட்டது. இந்த நிலையில் பெங்களூருவில் உணவகங்களின் உணவுகளின் விலை உயர்ந்துள்ளது. உணவுகளின் விலையில் 15 முதல் 20 சதவீதம் வரை உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. சில உணவகங்களில் புதிய உணவு விலை பட்டியல் வைக்கப்பட்டுள்ளது.
சில உணவகங்களில் உணவுகளின் விலை நிலவரம் வெளியாகியுள்ளது. அதாவது மசால் அரிசி சாதம் ரூ.30-ல் இருந்து 49 ஆகவும், செட் தோசை ரூ.30-ல் இருந்து ரூ.40 ஆகவும், பாதி அரிசி சாதம் ரூ.25-ல் இருந்து ரூ.30 ஆகவும், 2 சப்பாத்தி ரூ.20-ல் இருந்து ரூ.30 ஆகவும், புளியோதரை ரூ.30-ல் இருந்து ரூ.40 ஆகவும், பூரி ரூ.30-ல் இருந்து ரூ.40 ஆகவும், எலுமிச்சை சாதம் ரூ.30-ல் இருந்து ரூ.35 ஆகவும், சாம்பார் சாதம் ரூ.30-ல் இருந்து ரூ.35 ஆகவும், தயிர் சாதம் ரூ.30-ல் இருந்து ரூ.35 ஆகவும், பரோட்டா ரூ.30-ல் இருந்து ரூ.40 ஆகவும் உயர்ந்துள்ளது.
கூடுதல் செலவு
இதுகுறித்து உணவகங்களின் உரிமையாளர்கள் கூறுகையில், "சமையல் கியாஸ் விலை, கட்டிடங்கள் மீதான ஜி.எஸ்.டி. வரி உயர்வு போன்றவற்றால் எங்களுக்கு கூடுதல் நிதி சுமை ஏற்பட்டுள்ளது.
வணிக சமையல் கியாசுக்கு நாங்கள் 80 சதவீதம் அளவுக்கு வரி செலுத்துகிறோம். தொழிலாளர்கள் பற்றாக்குறை பிரச்சினை எழுந்துள்ளது. இதனால் உணவகங்களை நடத்துவது சவாலாக உள்ளது. அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகரித்து வருகிறது. அதனால் நாங்கள் உணவுகளின் விலையை உயர்த்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். இதற்கு வாடிக்கையாளர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்" என்றார்.
உணவுகளின் விலை உயர்ந்துள்ளதால் வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் செலவு ஏற்பட்டுள்ளது. உணவகங்களில் சாப்பிடும் வழக்கம் கொண்டவர்கள் இனி அதனை குறைத்து கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். கொரோனா பரவல் காரணமாக பொதுமக்கள் ஏற்கனவே போதிய வருவாய் இன்றி தவிக்கிறார்கள். இந்த நிலையில் உணவுகளின் விலை உயர்ந்திருப்பது அவர்களை நெருக்கடிக்கு ஆளாக்கியுள்ளது.