அரசு விடுதிகளில் இரவு உணவு சாப்பிட்ட 108 மாணவ-மாணவிகளுக்கு உடல்நிலை பாதிப்பு
|சிவமொக்காவில், அரசு விடுதிகளில் இரவு உணவு சாப்பிட்ட 108 மாணவ-மாணவிகளுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. சிவமொக்கா மெக்கான் அரசு ஆஸ்பத்திரியில் அவர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
சிவமொக்கா:
சிவமொக்காவில், அரசு விடுதிகளில் இரவு உணவு சாப்பிட்ட 108 மாணவ-மாணவிகளுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. சிவமொக்கா மெக்கான் அரசு ஆஸ்பத்திரியில் அவர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
மாணவ-மாணவிகள்
சிவமொக்கா(மாவட்டம்) டவுன் ஹனசவாடியில் மொரார்ஜி தேசாய் மாணவர் விடுதி அமைந்துள்ளது. இதேபோல் பாபுஜி நகரில் அரசு பெண்கள் தங்கும் விடுதி அமைந்துள்ளது. இந்த விடுதிகளில் தங்கி ஏராளமான மாணவ-மாணவிகள் அங்குள்ள அரசு பள்ளி, கல்லூரிகளில் படித்து வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் மாணவ-மாணவிகளுக்கு விடுதியில் உணவு வழங்கப்பட்டது.
அந்த உணவை சாப்பிட்ட 108 மாணவ-மாணவிகளுக்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டது. அவர்களுக்கு வாந்தி-மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக சிவமொக்கா மாவட்ட மெக்கான் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
கலெக்டர் நேரில் நலம் விசாரித்தார்
இதுபற்றி அறிந்த மாணவ-மாணவிகளின் பெற்றோர்கள் மெக்கான் அரசு ஆஸ்பத்திரியில் திரண்டனர். நேற்று காலையில் ஆஸ்பத்திரிக்கு மாவட்ட கலெக்டர் செல்வமணி சென்று மாணவ-மாணவிகளை சந்தித்து நலம் விசாரித்தார். பின்னர் அவர் மாணவ-மாணவிகளின் பெற்றோரிடம் பேசினார். அப்போது உணவே விஷமாக மாறியதால் அவர்களுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு இருக்கலாம் என்று கலெக்டர் தெரிவித்தார். மேலும் இதுபற்றி சுகாதார துறையினரும், டாக்டர்களும் ஆய்வு செய்து வருவதாகவும் அவர் கூறினார்.
அதையடுத்து சட்டத்துறை செயலாளரும், மாவட்ட சிவில் கோர்ட்டு நீதிபதியுமான ராஜண்ணா சங்கன்னவர் நேரில் ஆஸ்பத்திரிக்கு சென்று மாணவ-மாணவிகளை சந்தித்து நலம் விசாரித்தார்.