< Back
தேசிய செய்திகள்
உத்தரபிரதேசத்தில் ரேஷன் பொருட்கள் வழங்க உணவு தானிய ஏ.டி.எம்.
தேசிய செய்திகள்

உத்தரபிரதேசத்தில் ரேஷன் பொருட்கள் வழங்க 'உணவு தானிய ஏ.டி.எம்.'

தினத்தந்தி
|
19 March 2023 11:15 PM GMT

ரேஷன் கடைகளில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து உணவு பொருட்கள் வாங்கி வருகின்றனர்.

லக்னோ,

ரேஷன் கடைகளில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து உணவு பொருட்கள் வாங்கி வருகின்றனர். இந்த சிக்கலுக்கு தீர்வு காணும் வகையில் நாட்டின் சில மாநிலங்களில் தானியங்கி எந்திரங்கள் நிறுவப்பட்டு உள்ளன.

அதாவது, பணம் எடுக்கும் ஏ.டி.எம். போல, ரேஷன் வழங்குவதற்காக தானிய ஏ.டி.எம். எந்திரங்கள் நிறுவப்பட்டு உள்ளன. நாடு முழுவதும் 7 எந்திரங்கள் இதுவரை செயல்பாட்டில் இருக்கும் நிலையில், இதில் 3 எந்திரங்கள் உத்தரபிரதேசத்தில் திறக்கப்பட்டு உள்ளன. மாநில தலைநகர் லக்னோவின் ஜானகிபுரம் பகுதியில் கடந்த 15-ந்தேதி தானிய ஏ.டி.எம் நிறுவப்பட்டது. இந்த எந்திரம் மூலம் சுமார் 150 ரேஷன் கார்டுதாரர்களுக்கு உணவு தானியம் வழங்கப்பட்டு உள்ளது.

ஏ.டி.எம். மையத்தில் இருக்கும் விரல் பதிவு எந்திரத்தில் ரேஷன்கார்டு தாரரின் விரல் அடையாளம் வைக்கப்பட்டவுடன், அந்த எந்திரத்தில் இருந்து அரிசி மற்றும் கோதுமை வெளிவருகிறது.

30 வினாடிகளில் இந்த நடைமுறை அனைத்தும் முடிவடைவதால், ரேஷன் பொருட்கள் வாங்க காத்திருப்பு என்ற நிலை மாறியிருப்பதாக பொதுமக்கள் கூறியுள்ளனர். இது அவர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

மேலும் செய்திகள்