டெல்லியில் பனிமூட்டம்: 20 விமானங்கள் காலதாமதம்; வாகன போக்குவரத்து பாதிப்பு
|டெல்லியில் பனிமூட்டத்தினால் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளதுடன், 20 விமானங்கள் காலதாமதமுடன் வந்து சேரும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
புதுடெல்லி,
வடஇந்தியாவில் கடும் குளிர்கால சூழல் நிலவுகிறது. இதனால், வீடுகளை விட்டு காலையில் வெளியே வரும் மக்கள் அதிக சிரமத்திற்கு ஆளாகின்றனர். டெல்லியில் தற்போது நடந்து வரும் குளிர்கால பருவத்தில் நகரின் பல்வேறு பகுதிகளில் மிக கடுமையாக பனி சூழ்ந்து காணப்படுகிறது.
காலையிலேயே பனிமூட்டம் காணப்படுகிறது. எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு தெளிவற்ற வானிலை காணப்படுகிறது. இதனால், சாலைகளில் செல்லும் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி செல்கின்றன.
டெல்லியில் கடும் குளிரால் மக்கள் பகல்பொழுதில் அடர்த்தியான ஆடைகளை அணிந்தபடி காணப்படுகின்றனர். விடுமுறை நாளான இன்று குறைவான அளவிலேயே மக்கள் வெளியே வருகின்றனர்.
எனினும், வருகிறவர்கள் தங்களது வாகனங்களில் செல்வதில் சிரமம் காணப்படுகிறது. டெல்லி விமான நிலையத்தில் கடும் பனி மற்றும் தெளிவற்ற பார்வை ஆகியவற்றால், விமானங்கள் காலதாமதமுடன் வந்து சேருகின்றன.
இதன்படி, மொத்தம் 20 விமானங்களின் சேவை பாதிக்கப்பட்டு உள்ளது. அவை காலதாமதமுடன் வந்து சேரும் என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். எனினும், காலை 6 மணிவரை விமானங்கள் எதுவும் வேறு பகுதிக்கு திருப்பி விடப்படவில்லை என டெல்லி விமான நிலைய அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.