வான்பாதுகாப்பு சாதனங்களை வலுப்படுத்த வேண்டும் - விமானப்படை அதிகாரிகளுக்கு ராஜ்நாத்சிங் அறிவுறுத்தல்
|இந்தியாவின் வான்பாதுகாப்பு சாதனங்களை வலுப்படுத்துமாறு விமானப்படை அதிகாரிகளை ராஜ்நாத்சிங் கேட்டுக்கொண்டார்.
புதுடெல்லி,
டெல்லியில், இந்திய விமானப்படை உயர் அதிகாரிகளின் 2 நாள் மாநாடு நேற்று தொடங்கியது. அதை ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங் தொடங்கி வைத்தார்.
இந்திய முப்படை தலைமை தளபதி அனில் சவுகான், விமானப்படை தளபதி வி.ஆர்.சவுத்ரி மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
விமானப்படையின் போர்த்திறனை வலுப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன், விமானப்படையின் எதிர்கால திட்டங்கள் குறித்து அதிகாரிகள் ஆலோசனை நடத்துகின்றனர்.
சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளுடனான எல்லைகளின் பாதுகாப்பு நிலவரம் குறித்து விரிவாக ஆய்வு நடத்துகிறார்கள். புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்துவது பற்றியும் விவாதிக்கிறார்கள்.
புதிய சவால்கள்
மாநாட்டை தொடங்கி வைத்து ராஜ்நாத்சிங் பேசியதாவது:-
உலகளாவிய பாதுகாப்பு சூழ்நிலையில் புதிய சவால்கள் உருவெடுத்துள்ளன. அவற்றை எதிர்கொள்ள நாம் தயார்நிலையில் இருக்க வேண்டும்.
வான்வழி போர்முறையில் புதிய பாணிகள் பின்பற்றப்படுகின்றன. ஆகவே, இந்தியாவின் வான்பாதுகாப்பு சாதனங்களை வலுப்படுத்துவதில் நீங்கள் கவனம் செலுத்த ேவண்டும். டிரோன்கள் பயன்பாட்டையும் அதிகரிக்க வேண்டும்.
தயார்நிலையில் இருக்க வேண்டும்
எத்தகைய செயல்பாடுகளுக்கும் தயார்நிலையில் இருக்க வேண்டும். முப்படைகளும் கூட்டாக திட்டமிட்டு, கூட்டாக செயல்பாடுகளை நிறைவேற்ற வேண்டும். வேகமாக மாறிவரும் புவி-அரசியல் சூழ்நிலையை ஆய்வு செய்யுங்கள். அவற்றை இந்தியாவுக்கு ஏற்ற முறையில் செயல்படுத்துங்கள்.
சமீபத்தில், இமாசலபிரதேசம், சிக்கிம் போன்ற மாநிலங்களில் பேரிடர் சம்பவங்களின்போது விமானப்படை சிறப்பான நிவாரணப்பணிகளை மேற்கொண்டதற்கு பாராட்டுகள்.
இவ்வாறு அவர் பேசினார்.