< Back
தேசிய செய்திகள்
ஆந்திரா, தெலுங்கானாவில் வெள்ள பாதிப்பு: காங்கிரஸ் தொண்டர்கள் ஒன்றிணைய ராகுல் காந்தி கோரிக்கை

கோப்புப்படம்

தேசிய செய்திகள்

ஆந்திரா, தெலுங்கானாவில் வெள்ள பாதிப்பு: காங்கிரஸ் தொண்டர்கள் ஒன்றிணைய ராகுல் காந்தி கோரிக்கை

தினத்தந்தி
|
2 Sept 2024 6:41 PM IST

வெள்ள நெருக்கடியை சமாளிப்பதற்கு தெலுங்கானா அரசு சோர்வின்றி உழைத்து வருவதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

ஆந்திர பிரதேசம் மற்றும் தெலுங்கானாவில் சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. கனமழையை தொடர்ந்து இரு மாநிலங்களிலும் உள்ள ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. ரெயில் மற்றும் வாகன போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளது. கனமழை மற்றும் வெள்ள பாதிப்பில் சிக்கி இதுவரை 27 பேர் பலியாகி உள்ளனர். இதன்படி தெலுங்கானாவில் 15 பேரும், ஆந்திர பிரதேசத்தில் 12 பேரும் உயிரிழந்து உள்ளனர். வெள்ளம் பாதித்த பகுதிகளில் சிக்கி தவித்த ஆயிரக்கணக்கானோரை தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு குழுவினர் மீட்டு நிவாரண முகாம்களுக்கு அழைத்துச் சென்றனர். கனமழை மற்றும் வெள்ளம் தொடர்ச்சியாக, 100-க்கும் மேற்பட்ட ரெயில்கள் ரத்து செய்யப்பட்டும், பல ரெயில்கள் வேறு பகுதிகளுக்கு திருப்பி விடப்பட்டும் உள்ளன.

இந்நிலையில் ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் நடைபெற்று வரும் மீட்புப் பணிகளில் காங்கிரஸ் தொண்டர்கள் ஒன்றிணைய வேண்டும் என்று அக்கட்சியின் முக்கிய தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில், "இடைவிடாத மழை மற்றும் பேரழிவு தரும் வெள்ளத்தைத் தாங்கி வரும் தெலுங்கானா மற்றும் ஆந்திரப் பிரதேச மக்கள் மீது தற்போது எனது எண்ணங்கள் நிறைந்துள்ளன. அன்புக்குரியவர்களை இழந்து வாடும் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். தற்போது நடைபெற்று வரும் நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளுக்கு ஆதரவாக இருக்கும்படி காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் தொண்டர்களை நான் கேட்டுக்கொள்கிறேன்.

தெலுங்கானா அரசு நெருக்கடியைச் சமாளிப்பதற்கும், மறுகட்டமைப்பு செயல்முறையைத் தொடங்குவதற்கும் அயராது உழைத்து வருகிறது. இந்தப் பேரிடரால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் விரிவான மறுவாழ்வுத் தொகுப்புகளை விரைவாக வழங்குமாறு மத்திய அரசு மற்றும் ஆந்திரப் பிரதேச அரசு ஆகிய இருவரையும் நான் அழுத்தமாக வலியுறுத்துகிறேன்" என்று அதில் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்