< Back
தேசிய செய்திகள்
டெல்லி: யமுனை ஆற்றில் வெள்ளப்பெருக்கு.. அபாய அளவை தாண்டியதால் கரையோர மக்கள் வெளியேற்றம்..!

Image courtesy: PTI

தேசிய செய்திகள்

டெல்லி: யமுனை ஆற்றில் வெள்ளப்பெருக்கு.. அபாய அளவை தாண்டியதால் கரையோர மக்கள் வெளியேற்றம்..!

தினத்தந்தி
|
27 Sept 2022 11:14 AM IST

யமுனை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

டெல்லி:

வட மாநிலங்களில் மேல் நீர்பிடிப்பு பகுதிகளில் இடைவிடாது பெய்து வரும் தொடர் மழையால் யமுனை ஆற்றில் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. டெல்லி யமுனை ஆற்றில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளத்தால், தாழ்வான பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன. இந்த ஆண்டு இதுவரை இல்லாத அளவுக்கு ஆற்றின் நீர்மட்டம் அபாயக் குறியான 205.33 மீட்டரை தாண்டியுள்ளது.

இது குறித்து கிழக்கு டெல்லி மாவட்ட மாஜிஸ்திரேட் அனில் பங்கா கூறுகையில்,

செவ்வாய்க்கிழமை (இன்று) காலை ஆற்றின் நீர்மட்டம் 206 மீட்டரைத் தாண்டியதை அடுத்து கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஆற்றங்கரையோரம் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் வெளியேற்றப்பட்டு மேடான பகுதிகளுக்கு மாற்றப்பட்டு வருகின்றனர். அருகில் உள்ள அரசு பள்ளிகள் மற்றும் இரவு தங்கும் விடுதிகளில் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.

இன்று காலை 8 மணி நிலவரப்படி ஆற்றில் 206.16 மீட்டராக பெருக்கெடுத்து ஓடியது. பிற்பகல் 3 மணி முதல் 5 மணி வரை நீர்மட்டம் 206.5 மீட்டராக அதிகரிக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது. ஹரியானாவில் உள்ள ஹத்னிகுண்ட் தடுப்பணையில் இருந்து காலை 7 மணியளவில் சுமார் 96,000 கனஅடி நீர் வெளியேற்றப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தடுப்பணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரானது தலைநகரை சென்றடைய இரண்டு முதல் மூன்று நாட்கள் ஆகும்.

மேலும் செய்திகள்