< Back
தேசிய செய்திகள்
குஜராத்தில் கனமழையால் 3 ஆயிரம் பேர் வெளியேற்றம்: முதல்-மந்திரியுடன் அமித்ஷா பேச்சு
தேசிய செய்திகள்

குஜராத்தில் கனமழையால் 3 ஆயிரம் பேர் வெளியேற்றம்: முதல்-மந்திரியுடன் அமித்ஷா பேச்சு

தினத்தந்தி
|
24 July 2023 5:22 AM IST

குஜராத்தில் ஜூனாகத் மாவட்டத்தில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் வடிந்தது. அங்கு 3 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.

ஆமதாபாத்,

குஜராத் மாநிலத்தில் நேற்று முன்தினம் பெருமழை கொட்டி தீர்த்தது. நேற்று காலை 6 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில், ஜூனாகத் நகரில் 241 மி.மீ. மழை பெய்தது.

அதனால், நகரத்தில் பல இடங்கள் வெள்ளத்தில் மிதந்தன. வீட்டு முன்பு நிறுத்தப்பட்டிருந்த கார்கள் அடித்து செல்லப்பட்டன. சேதடைந்த கார்கள், ஒன்றின்மீது ஒன்று குவிந்தன. கால்நடைகளும் வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்டன. அவற்றின் உடல்கள், தண்ணீரில் மிதந்தன.

அணைகளிலும், ஆறுகளிலும் நீர்மட்டம் அபாய அளவை எட்டியது. ஆமதாபாத் விமான நிலையத்திலும் தண்ணீர் தேங்கியது. சாலையில் குவிந்து கிடந்த கார்கள், கிரேன் மூலம் அகற்றப்பட்டன. தண்ணீரை வெளியேற்றும் பம்ப் மூலம் தேங்கிய நீர் வெளியேற்றப்பட்டது.

வெள்ளம் வடிந்தது

இந்நிலையில், நேற்று ஜூனாகத் நகரில் மழை இல்லை. அதனால், வெள்ளம் வடிந்தது. இதுகுறித்து ஜூனாகத் மாவட்ட கலெக்டர் அனில் ரணவாசியா கூறியதாவது:- ஜூனாகத் நகரில் தண்ணீர் வடிந்து விட்டது. 200 பேர், தண்ணீர் சூழ்ந்த பகுதிகளில் இருந்து மீட்கப்பட்டனர். 750 பேர், தாழ்வான பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்டனர். ஏற்கனவே 2,200 பேர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பான பகுதிகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

சாலைகள் மூடல்

தற்போது, நகரை தூய்மைப்படுத்தும் பணிக்கு முன்னுரிமை கொடுத்து வருகிறோம். இதற்காக, 1,000 தூய்மைப்பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தேசிய பேரிடர் மீட்பு படை, மாநில பேரிடர் மீட்பு படை ஆகியவை மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் ஈடுபட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

தண்ணீர் தேங்கியதால், 2 தேசிய நெடுஞ்சாலைகள், 10 மாநில நெடுஞ்சாலைகள், 300 கிராமப்புற சாலைகள் மூடப்பட்டன.

மீண்டும் மழை

இதற்கிடையே, நேற்று பாவ்நகர், ராஜ்கோட், ஜாம்நகர், பாருச், சூரத், போடாட் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்தது. 4 மணி நேரத்தில் 50 மி.மீ. முதல் 117 மி.மீ.வரை மழை பெய்தது.

அடுத்த 24 மணி நேரத்தில் தேவ்பூமி துவாரகா, ராஜ்கோட், பாவ்நகர், வல்சாத் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் கூறியுள்ளது. 'ஆரஞ்சு' எச்சரிக்கை விடுத்துள்ளது.

அமித்ஷா

குஜராத் வெள்ள நிலவரம் தொடர்பாக பேச அம்மாநில முதல்-மந்திரி பூபேந்திர படேலை மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நேற்று தொலைபேசியில் தொடர்பு கொண்டார். நிலைமையை கேட்டறிந்தார்.

அதுபோல், யமுனை ஆற்றில் மீண்டும் அபாய அளவை கடந்து வெள்ளம் பாய்வதால், டெல்லி கவர்னர் வி.கே.சக்சேனாவுடனும் அமித்ஷா ஆலோசனை நடத்தினார். தேசிய பேரிடர் மீட்பு படை, மாநில பேரிடர் மீட்பு படை ஆகியவை மக்களுக்கு உதவ தயார்நிலையில் இருப்பதாக தெரிவித்தார். யமுனை நீர்மட்டம் உயர்ந்ததால், ஏற்கனவே வெள்ளம் பாதித்த பகுதிகளில் நடந்து வரும் நிவாரண பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

மேலும் செய்திகள்