< Back
தேசிய செய்திகள்
வெள்ள நிவாரணம்: மக்களவையில் பா.ஜ.க.வுடன் வாக்குவாதம் - தி.மு.க. வெளிநடப்பு
தேசிய செய்திகள்

வெள்ள நிவாரணம்: மக்களவையில் பா.ஜ.க.வுடன் வாக்குவாதம் - தி.மு.க. வெளிநடப்பு

தினத்தந்தி
|
6 Feb 2024 12:15 PM IST

வெள்ள நிவாரணம் தொடர்பாக மக்களவையில் தி.மு.க.-பா.ஜ.க. இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

புதுடெல்லி,

மக்களவையின் இன்றைய நிகழ்வின்போது தி.மு.க. எம்.பி. ஆ.ராசா பேசியதாவது:-

தமிழ்நாட்டுக்கு பேரிடர் நிவாரண நிதி ஒதுக்குவதில் மத்திய அரசு பாரபட்சம் பார்க்கிறது. நிதி வழங்குவது தொடர்பாக இதுவரை மத்திய அரசு எந்த பதிலும் அளிக்கவில்லை. தமிழகத்திற்கு வெள்ள நிவாரண நிதியை மத்திய அரசு வழங்குவது எப்போது? எவ்வளவு வழங்கப்படும்?. குஜராத் உள்ளிட்ட பா.ஜ.க. ஆளும் மாநிலங்களுக்கு மட்டும் நிதி வழங்கப்படுகிறது.

மாநில பேரிடர் நிதிக்கும், தேசிய பேரிடர் நிதிக்கும் எந்த தொடர்பும் இல்லை, மாநில பேரிடர் நிதி என்பது பேரிடரின்போது மாநில அரசு ஒதுக்கும் நிவாரண நிதியாகும், இது அனைத்து மாநிலத்துக்கும் பொதுவானது. தேசிய பேரிடர் நிவாரண நிதியில், அனைத்து மாநிலங்களுக்கும் பாரபட்சம் இல்லாமல் சமமான நிவாரண நிதி வழங்கும் நிலையை அளிக்கும் வகையில் புதிய விதிகளை வகுக்க வேண்டும் என்று பேசினார்.

இதற்கு பதில் அளித்து உள்துறை இணை மந்திரி நித்யானந்த் ராய் கூறுகையில், சென்னைக்கு மட்டும் மத்திய அரசு ரூ.500 கோடி ஒதுக்கியுள்ளது; வெள்ளத்தில் இருந்து பாதுகாக்க புதிய திட்டங்களை சென்னையில் மத்திய அரசு செயல்படுத்தியுள்ளது; வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு தமிழ்நாடு அரசின் குழுவிற்கு முன் மத்திய குழுதான் சென்றது என்றார்.

இதையடுத்து வெள்ள நிவாரணம் கோரி தி.மு.க. மக்களவைக் குழு தலைவர் டி.ஆர்.பாலு பேசுகையில், "வானிலை மையம், பேரிடர் குறித்து சரியான கணிப்பை வழங்கவில்லை" என்றார்.

அப்போது மத்திய மந்திரிகள் குறுக்கீடு செய்தனர். இதனால் மக்களவையில் தி.மு.க., பா.ஜ.க. எம்.பிக்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து தமிழகத்திற்கான வெள்ள நிவாரண நிதியை விடுவிக்காததை கண்டித்து தி.மு.க. எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர்.

மேலும் செய்திகள்