< Back
தேசிய செய்திகள்
வெள்ளத்தில் மிதக்கும் ராமநகர்
தேசிய செய்திகள்

வெள்ளத்தில் மிதக்கும் ராமநகர்

தினத்தந்தி
|
30 Aug 2022 4:06 AM IST

ராமநகரில் விடிய, விடிய கொட்டித்தீர்த்த கனமழைக்கு 5 ஏரிகள் உடைந்தன. இதனால் ஏற்பட்ட வெள்ளத்தால் ராமநகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கிறது.

பெங்களூரு:

ராமநகரில் விடிய, விடிய கொட்டித்தீர்த்த கனமழைக்கு 5 ஏரிகள் உடைந்தன. இதனால் ஏற்பட்ட வெள்ளத்தால் ராமநகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கிறது.

வெள்ள பாதிப்புகள்

கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை கடந்த ஜூன் மாதம் தொடங்கி பெய்து வருகிறது. ஜூலை மாதத்தில் கனமழை கொட்டியது. இதில் குடகு, சிக்கமகளூரு, தட்சிண கன்னடா, உடுப்பி, உத்தரகன்னடா, சிவமொக்கா, ஹாசன் உள்ளிட்ட மாவட்டங்களில் வெள்ளம் ஏற்பட்டது. மாநிலத்தில் பெரும்பாலான அணைகள் மற்றும் ஏரி, குளங்கள் உள்பட நீர்நிலைகள் நிரம்பி வழிந்தன. அங்கு மழை நின்றதை அடுத்து அரசு வெள்ள நிவாரண பணிகளை முடுக்கிவிட்டது.

இந்த நிலையில் இம்மாதத்தின் தொடக்கத்திலும் பருவமழை தீவிரம் அடைந்து மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்து வருகிறது. அதே போல் தலைநகர் பெங்களூரு மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களிலும் கனமழை கொட்டி வருகிறது. குறிப்பாக கடந்த ஒரு வாரமாக ராமநகர், சாம்ராஜ்நகர், மைசூரு, மண்டியா, துமகூரு உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

விடிய, விடிய கொட்டித்தீர்த்தது

ராமநகரில் கடந்த 27-ந் தேதி இரவு கனமழை பெய்தது. இதனால் அங்குள்ள கன்வா அணை நிரம்பியது. பெரிய ஏரிகளும் நிரம்பின. இந்த நிலையில் அந்த மாவட்டத்தில் 2-வது நாளாக நேற்றும் விடிய, விடிய மழை கொட்டித்தீர்த்தது. இதனால் ராமநகரை ஒட்டியுள்ள பெரிய ரங்கரபானதொட்டி ஏரி நிரம்பி உபரி நீர் அதிகளவில் கரைபுரண்டு வந்து அருகில் உள்ள ஹனுமந்தநகர், அர்கேஸ்வரா காலனிக்குள் புகுந்தது. அங்கு வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது.

இதனால் அங்கு வசிக்கும் மக்கள் வீடுகளின் மாடியில் தஞ்சம் அடைந்தனர். வீடுகளில் இருந்த உணவு தானியங்கள், உடைகள், பொருட்கள் என அனைத்தும் நீரில் மூழ்கி சேதம் அடைந்தன. இதனால் அந்த மக்கள் உணவுக்கே கஷ்டப்பட்டனர். மேலும் அந்த பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த கார்கள் நீரில் அடித்து செல்லப்பட்டன. எருமை உள்ளிட்ட கால்நடைகளும் வெள்ள பாதிப்பில் சிக்கி மீண்டு வர முடியாமல் திணறின.

கனகபுரா-குனிகல் பாதை

மேலும் பெங்களூரு-மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் மழை வெள்ளம் இடுப்பு அளவுக்கு தேங்கியதால், போக்குவரத்து நிறுத்தப்பட்டது. மைசூரு செல்லும் வாகனங்கள் மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன. ராமநகர் மாவட்டத்தில் ராமநகர் மற்றும் சன்னபட்டணா தாலுகாக்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. பெங்களூருவில் இருந்து மைசூருவுக்கு செல்பவர்கள் கனகபுரா மற்றும் குனிகல் பாதையை பயன்படுத்துமாறு போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

சன்னபட்டணாவிலும் கனமழை பெய்யததால் எலேகேரி-ராம்புரா சாலை நீரில் மூழ்கியது. இதனால் அந்த சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. மேலும் அந்த சாலையை ஒட்டியுள்ள குடியிருப்புகளிலும் மழைநீர் புகுந்து பாதிப்புகளை ஏற்படுத்தியது. முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி சன்னபட்டணாவுக்கு நேரில் சென்று மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். அவர்களுக்கு தேவையான உதவிகள் செய்யப்படும் என்று உறுதியளித்தார்.

கண்ணீர் விட்டு அழுதனர்

சன்னபட்டணா தாலுகாவில் உள்ள திட்டமாரனஹள்ளியில் ஏரி உடைந்து அந்த நீர் கிராமத்திற்குள் புகுந்தது. இதனால் பாதி கிராமமே நீரில் மூழ்கியுள்ளது. இதையடுத்து முன்எச்சரிக்கை நடவடிக்கையாக அந்த கிராம மக்கள் அங்குள்ள ஒரு அரசு பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அங்கு தற்காலிகமாக நிவாரண முகாம் அமைக்கப்பட்டுள்ளது.

அங்கு மக்களுக்கு அரிசி சாதம், ராகி கலி, சாம்பார் உள்ளிட்ட உணவுகள் வழங்கப்படுகின்றன. தங்களின் உடைமைகள் அனைத்தும் நீரில் மூழ்கிவிட்டதாக கூறி அங்கு தங்கி இருப்பவர்கள் கண்ணீர் விட்டு அழுதனர்.

20 ஆண்டுக்கு பிறகு நிரம்பிய அணை

ராமநகர் மாவட்டத்தில் மட்டும் பசகி, சேத்ரஹள்ளி, ஒங்கனூர், திட்டமாரனஹள்ளி உள்பட 5 ஏரிகளில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெள்ளமென விளைநிலங்களில் சீறிப்பாய்ந்தன. மேலும் மழை வெள்ளம் கிராமங்கள், குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்தன. உடைப்பு ஏற்பட்ட 5 ஏரிகளும் விவசாயத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்தது என கூறப்படுகிறது. அந்த ஏரிகளின் கரைகளை சரியாக பலப்படுத்தாததே உடைப்பு காரணம் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது. 20 ஆண்டுகளுக்கு பிறகு ராமநகரில் உள்ள கனவா அணைக்கட்டு நிரம்பி வழிகிறது. இதனால் அணையில் இருந்து திறக்கப்படும் நீர், அர்க்காவதி ஆற்றில் கரைபுரண்டு ஓடி வருகிறது. அபாய கட்டத்தை தாண்டி ஓடும் வெள்ளம், கரையோர கிராமங்கள், விவசாய நிலங்களில் புகுந்து பெருமளவு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

சாம்ராஜ்நகர்

ராமநகர் மட்டுமின்றி மண்டியா, சாம்ராஜ்நகர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் கனமழை பெய்துள்ளது. சாம்ராஜ்நகர், எலந்தூர், குண்டலுபேட்டை, ஹனூர் தாலுகாக்களில் கனமழை, வெள்ளத்தால் கிராமங்கள் நீரில் தத்தளிக்கின்ற. குறிப்பாக சாம்ராஜ்நகர் அருகே எடியூர் கிராமத்தில் உள்ள ஒரு பண்ணை வீட்டில் வெள்ளம் சூழ்ந்ததால் அங்கு இருந்த 5 பேரை ரப்பர் படகு மூலம் மாநில இயற்கை பேரிடர் மீட்பு குழுவினர் மற்றும் தீயணைப்பினர் பத்திரமாக மீட்டு வந்தனர்.

அதேபோல் அங்குள்ள ஒரு பெட்ரோல் விற்பனை நிலையம் மற்றும் எல்.ஐ.சி. அலுவவலம் நீரில் மூழ்கியது. மேலும் அங்குள்ள சிவக்குமார சுவாமி திருமண மண்டபத்தில் மழைநீர் புகுந்தது. இதனால் அங்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த திருமண நிகழ்ச்சிக்கு பெரும் இடையூறு ஏற்பட்டது. திருமணத்திற்கு வந்தவர்கள் மழைநீரில் மிதந்தபடி உணவு அருந்திவிட்டு சென்றனர். தொடர் கனமழையால் சாம்ராஜ்நகர் மாவட்டம் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. இதனால் நேற்று மாவட்டம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது.

பெங்களூருவில் மழை

துமகூரு மாவட்டம் பாவகடா தாலுகாவிலும் கனமழை கொட்டியது. இதனால் அங்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மழை நீர் கிராமங்களுக்குள் புகுந்து பாதிப்பு ஏற்பட்டது. வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் அங்கு வசிக்கும் மக்கள் பெரிதும் கஷ்டப்பட்டனர். அந்த மக்கள் அங்கிருந்து வெளியேறி பாதுகாப்பான இடத்தில் தஞ்சம் அடைந்தனர்.

தலைநகர் பெங்களூருவில் நேற்று காலை 6 மணிக்கு மழை பெய்யத்தொடங்கியது. இடைவிடாமல் பெய்தது. 6 மணிக்கு தொடங்கிய மழை காலை 10 மணி வரை 4 மணி நேரம் தொடர்ச்சியாக கொட்டி தீர்த்தது. அதுேபால் இரவு 8 மணிக்கு தொடங்கிய மழை இரவு 9 மணி வெளுத்து வாங்கியது. இதனால் நகரின் பல்வேறு சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதன் காரணமாக காலையில் பள்ளி-கல்லூரி செவெள்ளத்தில் மிதக்கும் ராமநகர்ல்லும் மாணவ-மாணவிகள், அலுவலகங்களுக்கு செல்வோர் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

சில்க்போர்டு, செயிண்ட் ஜான்ஸ் ஆஸ்பத்திரி சிக்னல், மடிவாளா, ஜே.சி.ரோடு, கார்ப்பரேஷன் சர்க்கிள், கெம்பேகவுடா சாலை உள்ளிட்ட சாலைகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் ஊர்ந்து சென்றன. யாதகிரி, ராய்ச்சூர், விஜயாப்புரா உள்ளிட்ட மாவட்டங்களிலும் மழை பெய்தது.

மேலும் செய்திகள்