டெல்லியில் இருந்து புறப்பட்ட விமானத்தில் பயணி உயிரிழப்பு; கராச்சியில் அவசரமாக தரையிறங்கியது
|பயணிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில், விமானம் பாகிஸ்தானுக்கு திருப்பிவிடப்பட்டும் பலன் இன்றி அவர் உயிரிழந்தார்.
புதுடெல்லி,
டெல்லி விமான நிலையத்தில் இருந்து 'இண்டிகோ' தனியார் நிறுவனத்தின் விமானம் ஒன்று, கத்தார் நாட்டின் தோஹாவுக்கு புறப்பட்டது. அந்த விமானம் நடுவானில் சென்று கொண்டிருந்தபோது, விமானத்தில் இருந்த 60 வயது மதிக்கத்தக்க ஒரு பயணிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அவர் பெயர் அப்துல்லா. நைஜீரியா நாட்டை சேர்ந்தவர்.
எனவே, வழியில் பாகிஸ்தானில் உள்ள கராச்சி விமான நிலையத்துக்கு விமானத்தை திருப்ப விமானி முடிவு செய்தார். அங்குள்ள விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார். அனுமதி கிடைத்தவுடன், கராச்சி விமான நிலையத்தில் விமானம் அவசரமாக தரை இறக்கப்பட்டது.
சுகாதாரத்துறையை சேர்ந்த டாக்டர்கள், அந்த பயணிக்கு சிகிச்சை அளிக்க விரைந்து வந்தனர். ஆனால், அவரை பரிசோதித்தபோது அவர் ஏற்கனவே உயிரிழந்திருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து, வழக்கமான நடைமுறைகளை முடிப்பதற்காக விமானம் அங்கேயே நிறுத்தி வைக்கப்பட்டது. பயணியின் இறப்பு சான்றிதழை அதிகாரிகள் தயார் செய்து அளித்தனர். அதையடுத்து, 5 மணி நேரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விமானம், அங்கிருந்து மீண்டும் டெல்லிக்கு வந்து சேர்ந்தது.