< Back
தேசிய செய்திகள்
5 வீராங்கனைகள் கற்பழிப்பு-மானபங்கம்: ராஜஸ்தான் துப்பாக்கி சுடும் பயிற்சியாளர் மீது பகீர் புகார்
தேசிய செய்திகள்

5 வீராங்கனைகள் கற்பழிப்பு-மானபங்கம்: ராஜஸ்தான் துப்பாக்கி சுடும் பயிற்சியாளர் மீது 'பகீர்' புகார்

தினத்தந்தி
|
11 Oct 2023 2:24 AM IST

5 வீராங்கனைகளை கற்பழிப்பு, மானபங்கம் செய்ததாக ராஜஸ்தான் துப்பாக்கி சுடும் பயிற்சியாளர் மீது ‘பகீர்’ புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

துப்பாக்கி சுடும் பயிற்சியாளர்

ராஜஸ்தான் துப்பாக்கி சுடும் சங்கத்தின் பயிற்சியாளராக இருப்பவர் சசிகாந்த் சர்மா. இவர் கடந்த சில ஆண்டுகளில், துப்பாக்கி சுடும் வீராங்கனைகள் இருவரை கற்பழித்ததாகவும், மேலும் 3 பேரை மானபங்கம் செய்ததாகவும் கூறப்படுகிறது. இத்தாலி நாட்டில் இந்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற்ற 'கிரீன் கப்' துப்பாக்கி சுடும் போட்டித்தொடரில் பங்கேற்க சென்றிருந்தபோது, பயிற்சியாளர் சசிகாந்த் சர்மா, ஒரு வீராங்கனையை தன்னுடன் ஒரே அறையில் தங்க நிர்ப்பந்தித்ததாகவும் கூறப்படுகிறது.

போலீசில் புகார்

இந்த சம்பவங்கள் தொடர்பாக, ராஜஸ்தான் துப்பாக்கி சுடும் சங்கம், இந்திய தேசிய துப்பாக்கி சுடும் சங்கம் ஆகியவற்றில் வீராங்கனைகள் புகார் அளித்துள்ளனர். அதையடுத்து, பாதிக்கப்பட்ட வீராங்கனைகளின் சார்பில் ராஜஸ்தான் துப்பாக்கி சுடும் சங்க இணைச்செயலாளர், போலீசில் புகார் செய்துள்ளார்.

மேலும் பல வீராங்கனைகள்?

இதுதொடர்பாக போலீசார் கூறுகையில், 'பாதிக்கப்பட்ட வீராங்கனைகளின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவர்களுக்கு மருத்துவ பரிசோதனையும் நடத்தப்படும். குறிப்பிட்ட பயிற்சியாளர், தொடர்ந்து இந்த குற்றத்தில் ஈடுபட்டுவந்ததாக தெரிகிறது. ஆரம்பகட்ட விசாரணையில், மேலும் பல வீராங்கனைகள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என தெரிகிறது. அவர் வீராங்கனைகளை அத்துமீறி தொட்டுள்ளார். பாதிக்கப்பட்ட பெண்களில் ஒருவர் சிறுமி என்பதால், 'போக்சோ' உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சம்பந்தப்பட்ட பயிற்சியாளர் இன்னும் கைது செய்யப்படவில்லை' என்றனர்.

மேலும் செய்திகள்