திரிபுராவில் 5 பயங்கரவாதிகள் போலீசில் சரண்
|திரிபுராவில் 5 பயங்கரவாதிகள் போலீசில் சரணடைந்தனர்.
அகர்தலா,
வடகிழக்கு மாநிலமான திரிபுராவில் 'திரிபுரா தேசிய விடுதலை முன்னணி' (என்.எல்.எப்.டி) என்ற பெயரில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பை சேர்ந்த பயங்கரவாதிகளுக்கு அண்டை நாடான வங்காளதேசத்தில் ஆயுத பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் வங்காளதேசத்தில் ஆயுத பயிற்சி பெற்று வரும் என்.எல்.எப்.டி பயங்கரவாதிகள் சிலர் பயிற்சி முகாமில் பல கஷ்டங்கள் மற்றும் விரோதமான சூழ்நிலைகளை எதிர்கொள்வதால் அங்கிருந்து திரிபுராவுக்கு திரும்பி போலீசில் சரணடைய முடிவு செய்திருப்பதாக மாநில போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதனை தொடர்ந்து உளவுத்துறை அதிகாரிகள் மூலம் அந்த பயங்கரவாதிகளை தொடர்பு கொண்ட போலீசார் அவர்கள் சரணடைவதற்கான வழிகாட்டுதல்களை வழங்கினர்.
அதன்படி நேற்று முன்தினம் வங்காளதேச எல்லையை கடந்து திரிபுரா வந்த 5 என்.எல்.எப்.டி பயங்கரவாதிகள் தலாய் மாவட்டத்தில் உள்ள சவ்மானு போலீஸ் நிலையத்தில் சரணடைந்தனர். தொடர்ந்து அவர்கள் 5 பேரையும் போலீசார் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.