திருவனந்தபுரம் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தற்கொலை
|திருவனந்தபுரம் அருகே ஓட்டலுக்கு அதிகாரிகள் ‘சீல்' வைத்த நிலையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தற்கொலை செய்துகொண்டனர்.
திருவனந்தபுரம்,
இந்த சோக சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
ஓட்டலில் சோதனை
திருவனந்தபுரம் அருகே உள்ள கல்லம்பலத்தை சேர்ந்தவர் மணிக்குட்டன் (வயது 46). இவர் அந்த பகுதியில் சிறிய ஓட்டல் நடத்தி வந்தார். இவருடைய மனைவி சந்தியா (36). இவர்களுக்கு அஜீஷ் (19) என்ற மகனும், அமேயா (13) என்ற மகளும் இருந்தனர். மேலும் சந்தியாவின் தாய் வழி உறவினர் தேவகி (85) என்பவரும் மணிக்குட்டன் வீட்டில் வசித்து வந்தார். ஓட்டல் தொழிலில் வியாபாரம் சுமாராக இருந்ததால் மணிக்குட்டன் கடன் வாங்கி குடும்பத்தை நடத்தி வந்துள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அவரது ஓட்டலில் சுகாதாரத்துறை அதிகாரிகள் திடீரென சோதனை நடத்தினர்.
'சீல்' வைப்பு
அப்போது ஓட்டலில் உணவு சுகாதாரமாக இல்லை என கூறி ஓட்டலுக்கு சீல் வைத்ததோடு ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்தனர். ஏற்கனவே வாங்கிய கடனை மணிக்குட்டன் அடைக்க முடியாமல் சிரமப்பட்ட நிலையில் ஓட்டலையும் மூட அதிகாரிகள் உத்தரவிட்டதால் மணிக்குட்டன் மனமுடைந்தார். இனி என்ன செய்ய போகிறோம் என வாழ்க்கையின் விரக்தி நிலைக்கே சென்றதாக தெரிகிறது. இதனை தொடர்ந்து நேற்று காலையில் நீண்ட நேரமாகியும் மணிக்குட்டன் வீட்டின் கதவு திறக்கப்படாமல் இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் மணிக்குட்டன் வீட்டு கதவை தட்டினர். ஆனால் உள்ளே இருந்து எந்தவொரு சத்தமும் வரவில்லை. மேலும் செல்போன் மூலமும் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை.
5 பேர் தற்கொலை
எனவே ஆற்றிங்கல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டனர். பின்னர் போலீசார் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
மணிக்குட்டன் தூக்கில் தொங்கிய நிலையிலும், அவரது மனைவி சந்தியா, மகன் அஜீஷ், அமேயா மற்றும் தேவகி ஆகியோர் விஷம் குடித்த நிலையில் பிணமாக கிடந்தனர். மேலும் வீட்டில் விஷ பாட்டிலும் கிடந்துள்ளன. மேலும் தற்கொலை செய்வதற்கு முன்பு கடிதம் ஏதும் மணிக்குட்டன் எழுதி வைத்துள்ளாரா? என வீடு முழுவதும் அங்குலம், அங்குலமாக போலீசார் சோதனை நடத்தினர். ஆனால் கடிதம் எதுவும் சிக்கவில்லை. அதே சமயத்தில் தற்கொலை செய்த நபர்களின் செல்போன்களை கைப்பற்றினர்.
கடன் தொல்லை
பின்னர் 5 பேருடைய உடல்களும் பிரேத பரிசோதனைக்காக திருவனந்தபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
கடன் தொல்லை, ஓட்டலுக்கு சீல் வைக்கப்பட்டதால் மனமுடைந்த மணிக்குட்டன் குடும்பத்துடன் தற்கொலை செய்திருக்கலாம் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.