< Back
தேசிய செய்திகள்
மதுராவில் ஆம்னி பஸ் - கார் மோதி விபத்து: 5 பேர் பலி
தேசிய செய்திகள்

மதுராவில் ஆம்னி பஸ் - கார் மோதி விபத்து: 5 பேர் பலி

தினத்தந்தி
|
12 Feb 2024 2:13 PM IST

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

நொய்டா,

ஆக்ராவில் இருந்து நொய்டாவிற்கு பயணிகளை ஏற்றி சென்று கொண்டிருந்த ஆம்னி பஸ் உத்தரப்பிரதேச மாநிலம் மதுராவில் உள்ள மகாவன் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட யமுனா எக்ஸ்பிரஸ் சாலையில் வந்து கொண்டிருந்தது. அப்போது ஆம்னி பஸ்சின் டயர் வெடித்து கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் பின்னால் வந்த கார் பஸ் மீது மோதியது. இந்த விபத்தில் பஸ் மற்றும் கார் தீப்பிடித்து எரிய தொடங்கின.

இந்த கோர விபத்தில் ஆம்னி பஸ்சில் இருந்தவர்கள் உயிர்தப்பிய நிலையில், காரில் இருந்த 5 பேரும் தீயில் கருகி உயிரிழந்தனர். இந்த சம்பவம் பற்றி போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். உயிரிழந்தவர்களின் உடல்களை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்த விபத்தில் இறந்தவர்களில் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவரது குடும்பத்தினரை தொடர்பு கொள்ள முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்